

பழநி: வார விடுமுறையையொட்டி பழநி மலைக்கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழகம் மட்டு மின்றிகேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனத்துக்குவருகின்றனர்.
நேற்று வார விடுமுறையையொட்டி பழநி மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ரோப் கார்மற்றும் வின்ச் ரயிலில் மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 மணிநேரம் காத்திருந்து பயணித்தனர்.
மலைக்கோயிலில் நேற்று அதிகாலை முதலே பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டன.
அன்னதானம் வழங்கும் இடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் கிரிவலம் வந்து மலைக்கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
பழநி அடிவாரம், சந்நிதி வீதி, பூங்கா சாலை, குளத்துச் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.