

சென்னை: தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தவெக தலைமை, தனது வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள், வரும் மே 4-ம் தேதி வெளியாகஉள்ளன. ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார் என்பதில் ஆளுங்கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் முதல் தேர்தலைச் சந்தித்துள்ள தவெக ஆகிய மூன்று கட்சிகளுமே அதீத நம்பிக்கையில் உள்ளன.
குறிப்பாக, முதல் தேர்தலிலேயே ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைப் பிடித்து விடுவோம் என்கிற நம்பிக்கையில் தவெக-வினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தீவிர ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை நாளன்று வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இந்தத் தொடர் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதாவது தேர்தலுக்குப் பிந்தைய கள நிலவரங்கள் குறித்து தவெக கட்சித் தலைமை நடத்திய விரிவான ஆய்வில், அக்கட்சி பல தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பனையூரில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில்,50,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 40-க்கும் மேற்பட்ட முக்கிய வேட்பாளர்கள் நேரில் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களிடத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் தேர்தல் முடிவு நாளில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள் குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்கள்.
ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் பேசுகையில், “தேர்தலுக்கு பிந்தைய கள ஆய்வுகள் நமக்குச் சாதகமாக உள்ளன.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவாகும் வாக்குகளைச் சரியாகச் சரிபார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை கவனக்குறைவாக இருக்கக் கூடாது.
குறைவான வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறும் தொகுதிகளில், எதிர்க்கட்சியினர் மறுவாக்கு எண்ணிக்கை கோரவோ, வழக்குத் தொடரவோ வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சூழல்களை எதிர்கொள்ள சட்ட வல்லுநர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
முடிவுகள் வெளியாகும் போது தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, ஜனநாயக முறைப்படி வெற்றியை உறுதி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்கள். இத்தகவலை தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.