

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயில் கோபுர கலசத்தில் நேற்று புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். | படங்கள்: ம.பிரபு |
சென்னை: மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவள்ளுவர் பிறந்ததாகக் கருதப்படும் சென்னை மயிலாப்பூரில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான அவரது கோயில் அமைந்துள்ளது.
முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்பு கோயிலான இத்தலத்துக்கு கடந்த 1975-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.20.90 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு முதல் இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, திருவள்ளுவர் அவதரித்த திருத்தலம், வாசுகி கோயில், முப்பால் மண்டபம், பொற்றாமரைக் குளம் ஆகியவை முற்றிலும் கருங்கல் திருப்பணியாக மேற்கொள்ளப்பட்டது.
ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், நடராஜர், பள்ளியறை, கருமாரியம்மன் சந்நிதி, பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள், வாகன மண்டபம், நூலகம் போன்றவை புதிதாக கட்டப்பட்டன. முப்பால் மண்டபத்தில் திருவள்ளுவரின் 1,330 திருக்குறள்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடங்கின. கடந்த 24-ம் தேதி தேவதா அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கோ பூஜை, ஷோடச மஹா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து, சூர்யா அக்னி சங்கிரகணம், யாகசாலை நியமனம், அங்குரா அர்ப்பண பூஜை, கும்ப அலங்காரம் ஆகியவற்றைத் தொடர்ந்து, 1,2,3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜை, வேதபாராயணம், மஹா பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. 9 மணிக்கு யாத்திரா தானம், கலச புறப்பாடு நடைபெற்று, அனைத்து விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இந்த விழாவில் மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு, அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், துணை ஆணையர் சி.நித்யா, விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.