ஸ்ரீரங்கத்தில் 12 ஜோதிர் லிங்க தரிசனம் தொடக்கம் - அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு

ஸ்ரீரங்கத்தில் 12 ஜோதிர் லிங்க தரிசனம் தொடக்கம் - அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு
Updated on: 
2 min read

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் 12 ஜோதிர் லிங்க தரிசன நிகழ்வு இன்று தொடங்கியது. இதில், பொதுமக்கள் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டி வழிபட்டனர்.

இந்தியாவில் தமிழகத்தின் ராமேசுவரம் ராமநாதசுவாமி உட்பட 8 மாநிலங்களில் 12 ஜோதிர் லிங்கங்கள் உள்ளன. ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்வதன் மூலம் ஆன்மிக அமைதி, பாவ நிவர்த்தி, மனத்தெளிவு மற்றும் இறையருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில், இந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் லிங்கங்கள் மாதிரிகள், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பக்தர்களின் தரிசனத்துக்காக கொண்டு செல்லப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்.12-ம் தேதி திருச்சி உறையூர் அருகே சீராத்தோப்பில் உள்ள பாரதியார் குருகுலத்தில் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் திருவண்ணமலையில் ஜோதிர் லிங்கங்கள் தரிசனம் நிகழ்ச்சி தொடங்கியது. அதன்பின், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்த இந்த ஜோதிர் லிங்கங்கள் இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள சிருங்கேரி மடத்துக்கு வந்தன.

இதில், 12 ஜோதிர் லிங்கங்களுக்கும் பொதுமக்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து, ஆரத்தி காட்டி சிறப்பு வழிபாடு செய்தனர். அபிஷேக செய்த தீர்த்தம், விபூதி, படையலிட்ட உணவுப்பொருட்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து நாளை மறுநாள் (நவ.29) வரை நடைபெறும் இவ்வைபவத்தில், காலை 8 மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஜோதிர் லிங்கங்களை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.

தொடர்ந்து 3 தினங்களும் தேவார, திருவாசக நித்ய பாராயணமும், மகா ஆரத்தியும் நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து புனித கங்கை தீர்த்தம், காவிரி தீர்த்தம், வில்வம், உதிரிப் பூக்கள், பூஜைப் பொருட்களை சமர்பித்து ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் 12 ஜோதிர் லிங்க தரிசனம் தொடக்கம் - அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.207 கோடி மதிப்புள்ள 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை வழங்கிய சென்னை தொழிலதிபர்

X