

மஞ்சள் மாதா கோயிலில் மண்டல கால வழிபாடு
தேனி: மஞ்சள் மாதா உள்ளிட்ட சபரி மலையின் துணை கோயில்களிலும் மண்டல வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஐயப்ப பக்தர்கள் இங்கும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்பன் கோயிலுக்கு மிக அருகில் மாளிகைப்புரத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்த பக்தர்கள் அனைவரும் இந்த ஆலயத்தில் உள்ள மஞ்சள் மாதாவை வழிபடுவது வழக்கம். இது பந்தளம் அரசு குடும்பத்தின் குல தெய்வமாகும்.
இந்த ஆண்டு இங்கு வழிபாடுகளை மேற்கொள்ள தலைமை அர்ச்சகராக (மேல்சாந்தி) மனு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மண்டல கால வழிபாட்டுக்காக ஐயப்பன் கோயில் திறக்கப்பட்ட அதே நாளில் இக்கோயிலிலும் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வழிபாடுகள் தினமும் நடைபெற்று வருகிறது. ஐயப்பனுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் இந்த அம்மனுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் பலரும் இக்கோயில் வளாகத்தை சுற்றி தேங்காய்களை உருட்டியபடி வழிபாடு செய்கின்றனர். மேலும் அம்மனுக்கு உகந்த மஞ்சள் பொடி, புதுத்துணி போன்வற்றை வழங்கி வருகின்றனர்.
திருமண பாக்கியம் தரும் என்ற ஐதீகம் உள்ளதால் பலரும் இந்த வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக உறவினர்கள், நண்பர்கள் அளித்த மஞ்சள்பொடி, புதுத்துணி போன்றவற்றை காணிக்கையாக அளித்து வருகின்றனர்.
இக்கோயிலைப் போலவே ஐயப்பனின் மணிமண்டபம், நாகராஜா சந்நிதி மற்றும் உப கோயில்களான பம்பா கணபதி, நிலக்கல் மகாதேவர் கோயில், எருமேலி தர்மசாஸ்தா உள்ளிட்ட பல ஆலயங்களிலும் மண்டல கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இக்கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளன.