

படம்: நா.தங்கரத்தினம்
பழநி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழநியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புதன்கிழமை (இன்று) மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை (இன்று )மாலை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களல் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்து வருகின்றனர். இதனால் பழநி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பக்தர்கள் இடும்பன் குளம், சண்முகநதியில் புனித நீராடு விட்டு, கிரிவலப்பாதையில் மலையைச் சுற்றி வந்து பாத விநாயகர் கோயிலில் வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் காவடி எடுத்து வந்தும், பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து வந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மலைக்கோயில் மற்றும் திருஆவினன்குடி கோயில் முழுவதும் பல வண்ண மலர்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மலைக்கோயிலில் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிவலம் வரும் பக்தர்களின் பாதங்களை பாதுகாக்க கிரிவலப்பாதை, சந்நிதி வீதியில் தேங்காய் நாரினால் செய்யப்பட்ட தரை விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது.
பிஸ்கட், தயிர் சாதம் வழங்கல்: திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் நாளை (ஏப்.2) வரை சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைத்து பக்தர்களும் சமமாக இலவச தரிசனம் செய்தனர். மலையேறும் மற்றும் மலைக்கோயிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் பசியாறும் வகையில் தேவஸ்தானம் சார்பில் பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் அடங்கிய ‘சிற்றுண்டி பை’ வழங்கப்பட்டது.
உபயதாரர்கள் மூலம் மலைக்கோயில் மற்றும் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கத்தில் தயிர் சாதம் வழங்கப்பட்டது. இதே போல், வழிநெடுகிலும் காவடிக் குழுக்கள் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய வெளி மாவட்டங்களுக்கு இன்று (ஏப்.1) ஒரு நாள் மட்டும் பழநியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
600 கண்காணிப்பு கேமரா: பழநி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த வசதியாக பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் சாலை என 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பழநி பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக வெளியூர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பழநியில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க, அடிவாரம், படிப்பாதை, யானை பாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிரந்தரமாக 300, தற்காலிகமாக 300 என மொத்தம் 600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடிவாரம் காவல் நிலையம் மற்றும் நகர் காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து, போலீஸார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், திருவிழா கூட்டத்தில் தொலைந்துபோன குழந்தைகள், பக்தர்களை எல்இடி திரையில் புகைப்படத்துடன் வெளியிட்டு அவர்களை குடும்பத்துடன் சேர்க்க, காவல் துறை சார்பில் மலைக்கோயில், கிரிவலப்பாதை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பெரிய ‘எல்இடி’ திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரப்பர் படகில் ரோந்து: பழநியில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், அவர்களின் பாதுகாப்பு கருதி 1,800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் அதிகாலை 2 மணி முதல் முடி காணிக்கை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கையாக மொத்தம் 150 தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சண்முகநதி, இடும்பன் குளத்தில் புனித நீராடும் பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.