

பத்தனம்திட்டா: சபரிமலையில் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது. பூஜை முடிந்த பின்னர் இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த நவம்பர் 17-ம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை, சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும்.
மண்டல பூஜையையொட்டி கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தினமும் கோயிலில் நெய்ய பிஷேகம், உஷ பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கோயிலில் ஐயப்பன் தரிசனத்துக்காக தினமும் ஆன்லைன் முன்பதிவில் 70,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில் 20,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மண்டல காலத்தையொட்டி சிறப்புப் பூஜை வரும் 27-ம் தேதி காலை 10.10 முதல் 11.30 மணி வரை நடைபெறும் என்று கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். இந்த தங்க அங்கி ஆரண்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து டிசம்பர் 23-ம் தேதி புறப்பட்டு சபரிமலையை டிசம்பர் 26-ம் தேதி அடையும். சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்ட பின்னர் 26-ம் தேதி மாலை தீபாராதனை நடைபெறும்.
27-ம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்த பின்னர் இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மகரவிளக்கு பூஜைக்காக கோயில் திறக்கப்படும். இவ்வாறு கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தெரிவித்தார்.