

தேர்தல் சர்வே என்ற பெயரில் அரசியல் கட்சிகள் புதுச்சேரி மக்களை கடந்த சிலநாட்களாக படுத்தி எடுக்கும் நிலையில், தேர்தல் ஆணைய தரவுகளில் இருந்து வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மர்மக் கும்பலால் திருடப்பட்டுள்ளதாக திகில் கிளப்பி இருக்கிறார் எதிர்க்கட்சி தலைவரும் மாநில திமுக அமைப்பாளருமான சிவா.
இது தொடர்பாக புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் மர்மக் கும்பலால் திருடப்பட்டுள்ளது. இது வெறும் தகவல் திருட்டுமட்டும் அல்ல... பாஜக ஆதரவுடன் நடந்திருக்கும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்பதற்கான சதியாகும். தேர்தல் ஆணையத்தின் மெத்தனத்தால் வாக்காளர்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
கடந்த டிச.3-ம் தேதி முதல், புதுச்சேரி முழுவதும் 7971319706 என்ற குஜராத்தில் பயன்பாட்டில் இருக்கும் தொலைபேசி எண்ணிலிருந்து வாக்காளர்களுக்கு அழைப்புகள் வந்து, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பெயரைச் சொல்லி ஒன்றை அழுத்து, ரெண்டை அழுத்து என போலியான ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்கள். அடுத்ததாக இதே பாணியில் முதல்வர் ரங்கசாமி பெயரிலும் சர்வே நடத்தினார்கள்.
சர்வே தொடர்பான அழைப்புகளில் வாக்காளர்களின் தொகுதிவிவரங்கள் துல்லியமாக குறிப்பிடப்படுவதால், தேர்தல் ஆணைய தரவுகளில் இருந்தே இந்தத் தகவல்கள் திருடப்பட்டிருப்பது உறுதியாகிறது. இந்த சர்வே தொல்லைகள் தொடர்பாக திமுக-வும் இன்னும் சிலரும் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் இந்த தகவல் திருட்டை ஆரம்பத்திலேயே தடுக்கமுடியாமல் போய்விட்டது.
அரசியல் கட்சிகளுக்கே வழங்கப்படாத தனிநபர் பற்றிய தகவல்கள் தனியார் மார்க்கெட்டிங் ஏஜென்சி கொள்ளைக் கும்பலிடம் போய்ச் சேர்ந்தது எப்படி? இதை எல்லாம் நடத்துவது துணைநிலை ஆளுநர் அலுவலகமா... அல்லது ஆளும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியின் கொல்லைப்புற அரசியல் தந்திரமா எனக் கேள்வி எழுகிறது. தரவுகள் திருட்டின் பின்னணியில் பாஜக இருப்பதால் தான் காவல்துறையும் தேர்தல் ஆணையமும் அமைதியாக இருக்கிறது போலிருக்கிறது.
பிஹார் தேர்தல் சமயத்தில் அம்மாநில பெண்களுக்கு வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் ரூபாயை வரவுவைத்தது போல் புதுச்சேரியிலும் திருடப்பட்ட தனிநபர் தகவல்களை வைத்து அரசியல் செய்யத் தயாராவது இதன்மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. இது சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். தேர்தல் ஆணையமும், சைபர் க்ரைம் போலீஸாரும் இந்த விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்க்கட்சிகளை திரட்டி பெரும் போராட்டத்தில் குதிப்போம்” என்றார்.