

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜை நிறைவடைந்த நிலையில் வரும் 19-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துகு அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்துக்காக கடந்த 30-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த 14-ம் தேதி ஐயப்பனுக்கு பாரம்பரிய நகைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, அன்று மாலை பொன்னம்பலம் மேட்டில் தெரிந்த மகரஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயிலில் நாளையுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறுகிறது. வரும் 19-ம் தேதி இரவு குருதி பூஜை நடைபெற உள்ளது.
அன்று இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். ஜனவரி 20-ம் தேதி காலையில் பந்தள ராஜ வம்சப் பிரதிநிதியின் பிரத்யேக தரிசனத்துக்கு பிறகு கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.