திருமலை: புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையையொட்டி, நேற்று திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. இதனால் சுவாமியை சர்வ தரிசனம் மூலம் தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆனது.
திருப்பதி ஏழுமலையானை இந்த புரட்டாசி மாதத்தில் தரிசிக்க வேண்டுமெனவும், நேர்த்திக்கடன் செலுத்த வேண்டுமெனவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் ஏழுமலையானுக்கு உகந்த மாதமான இந்த புரட்டாசியில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்படுவது வழக்கம். அதிலும், பிரம்மோற்சவம், புரட்டாசி சனிக்கிழமைகளில் எதிர்பாராத வகையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி, எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது. நேற்று சர்வ தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானத்தினர் வாரி சேவகர்கள் மூலம் உணவு, சிற்றுண்டி, பால், குடிநீர், மோர் போன்றவற்றை அடிக்கடி விநியோகித்தனர். லட்டு பிரசாதம், தலைமுடி காணிக்கை, காலண்டர்கள் விநியோக மையம், தங்கும் அறை வழங்குமிடம் என எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது