

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று நடைபெற்ற சித்திரை பெருவிழா கொடியேற்றம்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. உலக பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரைப் பெருவிழா உட்பட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதில் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இதன்படி, நிகழாண்டுக்கான சித்திரை பெருவிழா பந்தல்கால் முகூர்த்தம் மார்ச் 6-ம் தேதி நடைபெற்று நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, பஞ்சமூர்த்திகளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோயிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
இதையடுத்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து, நேற்று மாலை 6.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா நாட்களில் நாள்தோறும் பல்லக்கிலும், பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.27-ம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது. அப்போது நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வலம் வரும். அன்று அதிகாலை 5 மணிக்குள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.
18-ம் நாளான ஏப்.30-ம்தேதி தியாகராஜர் ருத்திரபாத தரிசனத்துடன் யதாஸ்தான பிரவேசம், அன்று பிற்பகல் நடராஜர் 4 ராஜவீதிகள் புறப்பாடு, சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும்.
தொடர்ந்து, அன்று மாலை கொடியிறக்கத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் அறநிலையத் துறை பணியாளர்கள், உபயதாரர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.