

சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து நேற்று பரப்புரை மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா.
சென்னை: தமிழகம் தற்போது பெற்றுள்ள வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
சென்னையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டி.ராஜா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். சைதாபேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: சமத்துவம், சமூக நீதிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தீவிரமான போராட்டத்தில் பாஜக மற்றும் அதனுடன் சேர்ந்திருப்பவர்களை வீழ்த்த நடைபெறும் தேர்தல் இது.
இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என கூறியவர் அம்பேத்கர், ஆனால், தற்போது பாஜகவின் செயல்பாடுகள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
பிரதமர் மோடி, அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தமிழகம் பின் தங்கியுள்ளதாக கூறுகின்றனர். இதுபற்றி கோயல் என்னுடன் விவாதிக்கத் தயாரா, எதில் தமிழகம் பின் தங்கியுள்ளது, கல்வி, மருத்துவம், வாழ்க்கை தரம் என அனைத்திலும் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.
மத்தியில் இருக்கும் ஆட்சி எல்லாருக்குமான ஆட்சி என்று சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், விவசாயிகள், ஏழைகளுக்கு எதிரான ஆட்சியாக அது உள்ளது.
அவர்களுடன் அதிமுக இங்கே அணி சேர்ந்து ஆதாரம் இல்லாத அவதூறுகளை பரப்பி வருகிறது. பழனிசாமி, தமிழகத்தின் கலாச்சாரம், உயர் மதிப்புகளை பாஜகவின் காலடியில் போட்டு வணங்கி வருகிறார்.
தமிழகம் தற்போது பெற்றுள்ள வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியே காரணம். மாநிலங்களின் நிதியை கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது போன்றவற்றை செய்து வருகிறது. மத்தியில் விரைவில் பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.