

சித்திரை முழுநிலவு திருவிழாவான நேற்று கண்ணகியை தரிசனம் செய்ய காத்திருந்த தமிழக - கேரள மாநில பக்தர்கள்.
குமுளி: சித்திரை முழுநிலவு திருவிழாவையொட்டி, மங்கலதேவி கண்ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். வாழும் பெண் தெய்வம் என்பதை உணர்த்தும் வகையில் மயில் பீலி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கல தேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. மதுரையை எரித்துவிட்டு வைகை ஆற்றங்கரை வழியே தலைவிரி கோலமாக வந்த கண்ணகிக்கு, கோவலன் மங்கலநாண் பூட்டி இங்கிருந்து விண்ணுக்கு அழைத்துச் சென்றதாக ஒரு நம்பிக்கை.
இதனால், கணவனை இழந்தாலும் மங்கலதேவி கண்ணகி என்ற பெயரிலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி வழியாக 6.6 கி.மீ. தூரம் நடைபாதை வழியாகவும், கேரளாவின் குமுளி, கொக்கரகண்டம் பகுதியில் 14 கி.மீ. ஜீப் பாதை வழியாகவும் செல்லலாம்.
கோயில் அமைந்துள்ள இடம் வனப்பகுதி என்பதால் சித்திரை மாத முழுநிலவன்று ஒரு நாள் மட்டும் வழிபாட்டுக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, கோலாகலமாக நேற்று விழா நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் மங்கலதேவி கண்ணகி.
இங்கு கண்ணகிக்கு சிதிலமடைந்த சிலையே இருப்பதால் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை அம்மனுக்கு உருக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, தமிழகம் சார்பில் பூசாரி ராஜலிங்கம் அம்மனுக்கு சர்வ அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, கையில் சிலம்பு, வளையல், மங்கலநாணுடன் கண்ணகி காட்சியளித்தார். பச்சைப் பட்டுடன் அருள்பாலித்த மங்கலதேவியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடந்த ஆண்டைவிட குறைவான ஜீப்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், பலரும் குமுளி வழியாக நடந்தே கோயிலுக்குச் சென்று திரும்பும் நிலை ஏற்பட்டது.
வருவாய்த் துறை சார்பில் கோயில் முன்பாக பொங்கல் வைத்தபோது, கேரள வனத்துறையினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆண்டுதோறும் சுற்றுலாத் துறை சார்பில் பளியன்குடியில் பரத நாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆனால், இந்த ஆண்டு எதுவும் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கேரள வனத்துறை மழை அறிவிப்பை காரணம் காட்டி தரிசன நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக பிற்பகல் 1.30 மணியிலிருந்து பக்தர்களை கீழே இறங்கிச் செல்ல அறிவுறுத்தினர். மேலும், குமுளியில் இருந்தும் ஜீப் இயக்கத்தை முன்னதாகவே நிறுத்தியதால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.