

சித்திரைத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று மதுரை விஜயத்தை முடித்து அழகர்கோவில் திரும்பிய கள்ளழகரை தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். உள்படம்: கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளிய கள்ளழகர். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்குச் சென்று திரும்பியபோது கள்ளழகர் 497 மண்டகப்படிகளில் எழுந்தருளி பல லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு நேற்று கோயிலை அடைந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். 21 பெண்கள் பூசணிக்காயில் தீபமேற்றி கள்ளழகருக்கு திருஷ்டி கழித்தனர்.
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.27-ம் தேதி தொடங்கியது. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க சுந்தரராஜப்பெருமாள், கள்ளர் திருக்கோலத்தில் ஏப்.29-ல் மலையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டார். மே 1-ம் தேதி அதிகாலை 5.48 மணிக்கு பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார்.
மே 2-ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். மே 4-ம் தேதி தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் அதிகாலை 2 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி அழகர்மலைக்குத் திரும்பினார்.
அன்றிரவு சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் கள்ளழகர் பயணத்தால் ஏற்பட்ட உடல் களைப்பை போக்கும் வகையில் அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று (மே 5) காலை 10.40 மணியளவில் கோட்டை வாசல் பகுதியில் நுழைந்தார்.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷமிட்டு, கள்ளழகரை மலர் தூவி வரவேற்றனர். பின்னர் கருப்பணசாமி கோயிலில் தீபாராதனை முடிந்து கோயிலுக்குள் நுழைந்தபோது 21 பெண்கள் பூசணிக்காயில் கற்பூர தீபமேற்றி கள்ளழகருக்கு திருஷ்டி கழித்தனர்.
சுந்தரவல்லித்தாயார் யானை வரவேற்றநிலயில் கோயிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். 10-ம் நாளான இன்று (மே 6) உற்சவ சாற்றுமுறையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஹரி ஹரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் விரிவாக செய்துள்ளனர்.