

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்.
விருத்தாசலம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனி திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி, திருமஞ்சன தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் ஜூன் 13-ம் தேதி சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டு, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 14-ம் தேதி முதல் வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதி உலா, தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலா, வெள்ளி பூத வாகனத்தில் சாமி வீதி உலா, வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா, வெள்ளி யானை வாகனத்தில் சாமி வீதி உலா, தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதி உலா என 20-ம் தேதி வரை தங்கரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா நடைபெற்றது. மேளதாளம் முழங்கிட வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் ஓதிட கோயிலிலிருந்து ஸ்ரீநடராஜர், ஸ்ரீ சிவகாமசுந்திரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். இதையடுத்து, பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுந்தனர். தேருக்கு முன்னால் சிவனடியார்கள், தேவ விற்பன்னர்கள் வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் படியபடியே சென்றனர்.
தேர் கீழவீதி நிலையில் இருந்து புறப்பட்டு கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகள் வழியாக மாலையில் நிலையை அடைந்தது. இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீமன் நடராஜ மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதேபோல் இன்று அதிகாலை 4 முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீமன்நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகமும், தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜையும் பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெறும். பிற்பகலில் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறும்.
தேர்த்திருவிழா மற்றும் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நகருக்குள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.