

பழநி: பழநி முருகன் கோயில் அன்னதானக் கூடத்தில் ஒரு பந்தியில் 200 பேர் சாப்பிடுவதற்கான வசதியிருந்த நிலையில், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இதையடுத்து, தற்போது ஒரே பந்தியில் 410 பேர் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்காக 2002-ம் ஆண்டு தமிழக முதல்வரின் அன்னதானத் திட்டத்தில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதன் பின்பு கடந்த 2012-ம் ஆண்டு முதல் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தினமும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை, தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு 25 நிமிடத்துக்கும் ஒரு முறை நடக்கும் பந்தியில் சராசரியாக 210 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தினமும் 5,000 முதல் 6,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியா ளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் குறைந்தது ஒரு மணி நேரமும், கூட்டம் அதிகமாக இருக்கும் போது 3 மணி நேரம் வரை காத்திருந்து அன்னதானம் சாப்பிடும் நிலை உள்ளது. சிலர் பசி தாங்க முடியாமல் பாதியிலேயே வரிசையிலிருந்து வெளியேறி விடுகின்றனர். எனவே, அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் கிடைக்கச் செய்யும் வகையில் ஒரு பந்தியில் சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ஒரு பந்தியில் சாப்பிடுவோரின் எண்ணிக்கையை 200 அதிகரித்து, மொத்தம் 410 பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அன்னதானக் கூடத்தில் கூடுதலாக 3 இடங்களில் மேஜை, நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறைந்து, அனைவரும் அன்னதானம் சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது.
புதிய இடத்தில் அன்னதானக் கூடம்
தற்போது அன்னதானத்துக்கு தேவையான வாழை இலைகள், காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மலையடிவாரத்தில் இருந்து வின்ச் ரயில் மூலம் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல்,
தினமும் மலைக்கோயிலில் இருந்து காய்கறி உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் வின்ச் ரயிலில் அடிவாரத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அன்னதானக் கூடத்தை அடிவாரத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கை யிலான பக்தர்கள் பயன்பெறுவர்.
புதிய அன்னதானக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பழநி மலையடிவாரத்தில் உள்ள அண்ணா செட்டிமடம்
மலையடிவாரத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ள அண்ணா செட்டி மடம் என்று அழைக்கப்படும் பகுதியில் நவீன சமையல் கூடம், பக்தர்கள் காத்திருக்கும் அறையுடன் அன்னதானக் கூடம் அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன் பெருந்திட்ட வளர்ச்சி பணியின் ஒரு பகுதியாக இந்த இடத்தில் அன்னதானக் கூடம் அமைக்கப்படும். தற்போது மலையடிவாரத்தில் உள்ள அந்த இடத்தை சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தற்போது உள்ள அன்னதானக்கூடம். (வலது) புதிய அன்னதானக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பழநி மலையடிவாரத்தில் உள்ள அண்ணா செட்டிமடம்.