

கட்டுமான பணி நடைபெற்று வரும் ஆழித்தேர்.
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்சபூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பல்வேறு சிறப்பு மிக்க இக்கோயிலின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்ட விழா நடைபெறும். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுப்பது வழக்கம். இந்நிலையில், நிகழ் ஆண்டுக்கான ஆழித்தேரோட்டம் மார்ச் 29-ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெற உள்ளது.
இதையடுத்து, தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர் கட்டுமானம், அலங்கரிப்பதற்காக 2,200 புதிய மூங்கில்கள் கொண்டுவரப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு தேர் சீலை, தொம்பைகள், 6 கிராதிகள், 2 பெரிய துவார பாலகர் சிலை உள்ளிட்டவை ரூ.21 லட்சத்துக்கு புதிதாக வாங்கப்பட்டு, அவற்றை தேரில் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அலங்கரிக்கப்படாத ஆழித்தேர் உயரம் மற்றும் அகலம் 30 அடியாகும். 96 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமாக இந்தத் தேர் கட்டப்பட்டு, தேரை சீராக இயக்க திருச்சி பெல் நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது.
தேர் செல்லும்போது அதை எளிதாக நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் வசதி அமைக்கப்பட்டுள்ளது. தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்படும். இதன்படி தேரின் மொத்த எடை 350 டன் ஆகும்.
தேர் சக்கரங்களில் கிரீஸ் வைத்து பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு, மார்ச் 28-ம் தேதி இரவு 8 மணிக்குமேல் அஜபா நடனத்துடன் ஆழித் தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருள்வார்.
அதைத் தொடர்ந்து, மார்ச் 29-ம் தேதி காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 9.05 மணிக்கு ஆழித்தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து, சண்டிகேஸ்வரர், அம்மன் தேர் வடம் பிடிக்கும் நிகழ்வும் நடைபெறும்.
ஆழித்தேரோட்ட விழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன.