ஶ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களா சாசன உற்சவம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
ஶ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களா சாசன உற்சவம்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களா சாசன உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஆகஸ்ட் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 வண்டி சப்பரமும், 4-ம் நாள் விழாவில் ரெங்கமன்னார் கோவர்த்தன கிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவை உற்சவம் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

இன்று காலை 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பெரியாழ்வார் எழுந்தருளினார். அதன்பின் ஆடிப்பூர கொட்டகையில் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளிய பெரிய பெருமாள், காட்டழகர் கோயில் சுந்தர்ராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள், நின்ற நாராயண பெருமாள் கோயில் திருத்தங்கல் அப்பன் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார்.

மூக்குத்தி சேவையில் ரெங்கமன்னார் உடன் எழுந்தருளிய ஆண்டாள் தாயாருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு மேல் 5 கருட சேவை நடைபெற உள்ளது. இதில் பெரிய பெருமாள், ஸ்ரீ ரெங்கமன்னார், திருத்தங்கல் அப்பன், சுந்தர்ராஜபெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோர் கருட வாகனங்களிலும், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் ஆண்டாள் கோயிலில் எழுந்தருளி, ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

7-ம் நாள் விழாவான புதன்கிழமை (ஆக.12)இரவு கிருஷ்ணன்கோவிலில் ஆண்டாள் மடியில் ரெங்கம்மன்னார் சயனத்திருக்கும் சயன சேவை உற்சவம் நடைபெறுகிறது. உச்ச நிகழ்வான ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

ஶ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களா சாசன உற்சவம்
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in