ஆடிபெருக்கு விழா: கிருஷ்ணகிரி அணையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

தென்பெண்ணையில் 985 கன அடி நீர் திறப்பு
ஆடிபெருக்கு விழா: கிருஷ்ணகிரி அணையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் நடந்த ஆடிபெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிபெருக்கு விழா (ஆடி 18) இன்று கிருஷ்ணகிரி அணை, மஞ்சமேடு, தீர்த்தம், அனுமன் தீர்த்தம் ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரி அணை செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளும், அணையில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

ஆடிப்பெருக்கையொட்டி, கிருஷ்ணகிரி அணைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அணை பகுதியில் உள்ள மார்கண்டேஸ்வரர் ஆலயத்தின் அருகில் உள்ள நந்தியில் இருந்து வரும் தண்ணீரிலும், தென்பெண்ணை ஆற்றிலும் புனிதநீராடி சுவாமி வழிபாடு செய்தனர். தொடர்ந்து பெண்கள், இளைஞர்கள் தங்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து கொள்ள, கோயில் பூசாரி சாட்டையால், அவர்கள் கை மீது அடிக்கும் நூதன வழிபாடு நிகழ்வும் நடந்தது.

மாவட்ட எஸ்பி அனிதா உத்தரவின் பேரில், டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார், ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் 985 கன அடி தண்ணீர் திறப்பு:

ஆடிப்பெருக்கு விழாவினையொட்டி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று கடந்த சில நாட்களாக அணையில் இருந்து விநாடிக்கு 985 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் பக்தர்கள் பெண்ணேஸ்வர மடம், நெடுங்கல், அகரம், மஞ்சமேடு உள்ளிட்ட பகுதிகளில் புனித நீராடினர்.

மேலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 546 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை விநாடிக்கு 556 கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக 52 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 46.85 அடியை எட்டியுள்ளது. மேலும், அணையில் இருந்து பாசனத்திற்கும், ஆற்றிலும் விநாடிக்கு 985 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஆடிபெருக்கு விழா: கிருஷ்ணகிரி அணையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஆடியில் பெருகாத காவிரி: ஆற்றுக்குள் ஊற்று பறித்து திருச்சி பெண்கள் வழிபாடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in