தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாயகி அம்மன் தேரோட்டம் கோலாகலம்

தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாயகி அம்மன் தேரோட்டம் கோலாகலம்
Updated on
2 min read

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி மற்றும் அன்னை தவம் பெற்ற நாயகி அம்மன் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ராஜபாளையம் சுற்று வட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்படித்து தேரை இழுத்தனர்.

தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் பாண்டிய நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது.

சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழாவில் திருக்கல்யாணம் மற்றும் திரு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாகத் திருவிழாவில் தினசரி சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் நகருக்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

7-ம் நாள் திருவிழாவில் அம்மையப்பர் தவம் பெற்ற நாயகி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 9-நாளான இன்று காலை முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட திருவிழா நடைபெற்றது. பெரிய தேரில் பிரியாவிடை அம்மனுடன் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறிய தேரில் அன்னை தவம் பெற்ற நாயகி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

காலை 10 மணிக்கு கோயில் பரம்பரை அறங்காவலர் துரை.ரத்தினகுமார் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ராஜபாளையம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். அன்னை தவம் பெற்ற நாயகி எழுந்தருளிய தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரு தேர்களும் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது. தேருக்கு பின்னால் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் கடன் செலுத்தினர். நாளை தீர்த்தவாரி உற்சவத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in