

திண்டுக்கல்: பழநியில் இன்று அக்னி நட்சத்திர விழா நிறைவையொட்டி அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
பழநியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும்,வைகாசி மாதத்தில் முதல் ஏழு நாட்களும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும்.இந்த ஆண்டு அக்னி நட்சத்திர விழா மே8-ம் தொடங்கியது. சித்திரை கழுவு என்று அழைக்கப்படும் இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 14 நாட்களுக்கு பழநி மலையைச் சுற்றி காலை மற்றும் மாலையில் கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம்.
இன்றுடன் (மே21) விழா நிறைவடைய உள்ள நிலையில், அதிகாலை முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கால்களில் செருப்பு அணியாமல், பெண்கள் கடம்ப மலர்களைத் தலையில் சூடியும், ஆண்கள் கைகளில் கடம்ப மலர் மற்றும் ஊதுபத்தியை கையில் வைத்து கொண்டு கிரிவலம் வந்தனர்.
பொள்ளாச்சி, கோவையைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறையில் இரட்டை மாட்டு வண்டியில் வந்தும், தீர்த்த காவடி எடுத்து வந்தும் கிரிவலம் வந்தனர். வெளி மாவட்டம், வெளி மாநில் பக்தர்கள் வருகையால் பழநியில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பழநி மலைக்கோயிலில் இலவச மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயிலுக்கு செல்ல ரோப் கார், மின் இழுவை ரயிலில் கூட்டம் அதிகளவில் இருந்தது.
வெளியூர் பக்தர்கள் வந்த வாகனங்களால் பழநியில் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தினர்.