

திண்டுக்கல்: பழநியில் அக்னி நட்சத்திர விழாவையொட்டி பெண்கள் முருகனுக்கு உகந்த கடம்ப மலர்களைத் தலையில் சூடியும், ஆண்கள் கைகளில் ஏந்தியபடி கிரிவலம் வந்து வழிபட்டனர்.
பழநியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தில் முதல் ஏழு நாட்களும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திர விழா இன்று தொடங்கி, மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சித்திரை கழுவு என்று அழைக்கப்படும் இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 14 நாட்களுக்கு பழநி மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம். அதன்படி, முதல் நாளான இன்று கால்களில் செருப்பு அணியாமல், பெண்கள் முருகனுக்கு உகந்த கடம்ப மலர்களைத் தலையில் சூடியும், ஆண்கள் கைகளில் ஏந்தியபடி கிரிவலம் வந்தனர்.
இந்த நாட்களில் காலை மற்றும் மாலையில் பழநி மலையைச் சுற்றி கிரிவலம் வரும் போது வீசும் மூலிகை காற்றால் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இதையொட்டி, மூன்று கடம்ப மலர்கள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகமாக வாங்குவதால் கடம்ப மலர்களின் விற்பனை களைகட்டியுள்ளது.