

கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் வரை பல்வேறு வாகனங்களில் தாயார் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் உபயநாச்சியாருடன் சாரங்கபாணிபெருமாள் தேருக்கு எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து நேற்று இரவு தீர்த்தவாரியும், இன்று சப்தாரர்ணமும், 81 கலச ஸ்நபன திருமஞ்சனமும், இரவு சாரங்கபாணி சுவாமியுடன் சக்கரபாணி சுவாமியும் வீதியுலா புறப்பாடும், நாளை முதல் 12-ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு பகுதிகளுக்கு எழுந்தருளலும், 13-ம் தேதி இரவு மணித்தட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட 3 புஷ்ப பல்லக்கில் சாரங்கபாணி, சக்கரபாணி, சக்கரவர்த்தி திருமகன் ஆகிய 3 சுவாமிகளின் வீதியூலா நடைபெறவுள்ளது.
இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மாநகர மேயர் க.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், மாநகராட்சி ஆணையர் ஆர்.லெட்சுமணன், துணை ஆணையர் தா.உமாதேவி, செயல் அலுவலர் ச.சிவசங்கரி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர் உச்சிபிள்ளையார் கோயில் அருகில் வந்த போது, உயர் மின் கோபுர கம்பத்தில் தேர் மோதியதால், உயர் மின் விளக்கு கோபுரம் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து தேரின் ஒருபுறத்தை தேரோட்டிகள் துண்டித்தனர். பின்னர், உயர் மின் கோபுரத்தை, இயந்திரம் மூலம் இழுத்து அகற்றி பிடித்துக் கொண்டபின், தேர் அந்த இடத்திலிருந்து நகர்ந்தது. இதனால் சுமார் 1 மணி நேரம் தேரோட்டம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து துணை மேயர் சு.ப.தமிழழகன் கூறியது, “ ஒவ்வொரு முறையில் இது போன்ற நிலை ஏற்படுவதால், விரைவில் அங்குள்ள உயர் மின் விளக்கு கம்பத்தை அகற்றப்படும். இப்பகுதிக்கு நவீன முறையில் உயர் மின் விளக்கு கம்பம் அமைக்கப்படும். அடுத்தாண்டு நடைபெறும் தேரோட்டத்தின் போது, இது போன்ற நிலை ஏற்படாது” எனத் தெரிவித்தார்.
தேர் இழுத்த திமுக எம்எல்ஏ: தேரோட்டத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், பக்தர்கள் ஆர்வமுடன் தேரை இழுத்துச் சென்றதை பார்த்ததும், ஆர்வத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்துச் சென்றார்.