

திருப்பூர்: பருவமழை தவறாமல் பெய்யவும், பொதுமக்கள் பிணியின்றி வாழவும் ஆண்டுதோறும் அவிநாசி லிங்கேஸ்வரர் மற்றும் ஆகாசராயர் கோயில் தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக அவிநாசியை அடுத்துள்ள ராயம்பாளையத்தில் இருந்து மண்ணால் உருவாக்கப்பட்டு வண்ணம் தீட்டிய குதிரையை அப்பகுதி மக்கள் ஆண்டு தோறும் சுமந்து வந்து ஆகாசராயர் கோயிலில் வைப்பது வழக்கம். அதன் பின்னரே தேர்த் திருவிழா தொடங்கும். அதன்படி நேற்று ராயம்பாளையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரையை சுமந்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து ஆகாசராயர் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. மே 2-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.