108 வைணவ திவ்ய தேச உலா - 93 | திருப்புளிங்குடி பூமிபாலகர் கோயில் 

108 வைணவ திவ்ய தேச உலா - 93 | திருப்புளிங்குடி பூமிபாலகர் கோயில் 

Published on

108 வைணவ திவ்ய தேசங்களில், தூத்துக்குடி மாவட்டம் திருப்புளிங்குடி காய்ச்சின வேந்தர் (பூமிபாலகர்) கோயில், 93-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. வரகுணமங்கையில் இருந்து கிழக்கே ஒரு மைல் தொலைவில் உள்ள இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

கொடுவினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கு இடர்கெட அசுரர்கட்கு இடர் செய்
கடுவினை நஞ்சே என்னுடையமுதே
கலிவயல் திருப்புளிங்குடியாய்
வடிவினை இல்லா மலர்மகள் மற்றை
நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே

(3577) திருவாய்மொழி 9.2.10

மூலவர்: பூமி பாலர் | உற்சவர்: காய்ச்சின வேந்தர் | தாயார்: மலர் மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார், புளியங்குடி வல்லி | தீர்த்தம்: வருண தீர்த்தம், நிருதி தீர்த்தம் |
விமானம்: வேத சார விமானம்

நவதிருப்பதிகளில் 4-வது திருப்பதியாகப் போற்றப்படும் இத்தலம் புதன் பகவானுக்குரிய பரிகாரத் தலமாக அமைகிறது. புதன் தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலமாக இருப்பதால், கல்வி கேள்விகளில் சிறக்க, பக்தர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, வஸ்திரம் சாற்றி, நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

யக்ஞசர்மா என்ற அந்தணர், வசிஷ்டரின் புத்திரர்களால் சாபம் அடைந்து, அசுரராகத் திரிந்தார். பின்னர் இத்தல பெருமாளை வழிபாடு செய்த பிறகே சாப விமோசனம் அடைந்தார். வருணன், நிருதி, தர்மராஜர், நரர் ஆகியோருக்கு பெருமாள் காட்சி அளித்துள்ளார்.

வேத சார விமானத்தின் கீழ் உள்ள கருவறையில், மூலவர் பூமிபாலகர் மரக்காலை தலைக்கடியில் வைத்து, கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்திலுள்ள லட்சுமிதேவி, பூமிபிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் மிகவும் பிரம்மாண்ட அளவில் உள்ளன.

பெருமாள் நாபியில் இருந்து தாமரைக் கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மதேவரின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. வெளிப்பிரகாரத்தில் உள்ள ஜன்னல் வழியாக பெருமாளின் பாத தரிசனம் காணலாம்.

இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடமாக இத்தலம் விளங்குகிறது.

திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in