

108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கோட்டைக்குள் உள்ள ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி கோயில் 86-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. 12 ஆயிரம் சாளக்கிராம கற்களால், 18 அடி நீளம் கொண்டதாக அமைந்துள்ள இத்தல பெருமாளை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
கெடும் இடராய எல்லாம் கேசவா என்னும் - நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே
(3678 திருவாய்மொழி 10-2-1)
மூலவர்: அனந்த பத்மநாபன் | தாயார்: ஸ்ரீ ஹரிலட்சுமி | தீர்த்தம்: மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள் |விமானம்: ஹேமகூட விமானம்
தல வரலாறு: முன்பொரு காலத்தில் வில்வ மங்கலத்து சாமியார் என்பவர், திருமாலை எப்போதும் நினைத்து, அவருக்கு பூஜைகள் செய்து வந்தார். தினமும் பூஜை நேரத்தில் சிறுவன் வடிவில் திருமால் வந்திருந்து, சாமியாருக்கு தொந்தரவுகள் கொடுப்பார். சிறுவனின் செயல்கள் கண்ணன் லீலைகள் போல் இருக்கும்.
சாமியார் மீது விளையாடுவது, பூஜைக்கு வைக்கப்பட்டிருக்கும் மலர்களை நாசம் செய்வது என்று சிறுவன் விளையாடினாலும், முதியவர் கோபப்படாமல் இருந்தார். முதியவரின் சகிப்புத் தன்மையை சோதிக்க எண்ணிய திருமால், இவ்விதம் விளையாடியதாகக் கூறப்படுகிறது. ஒருநாள் பொறுமை இழந்த முதியவர், “உன்னி (குழந்தை) கண்ணா. இப்படி எல்லாம் செய்யக் கூடாது” என்று கூறி சிறுவனை கீழே தள்ளி விட்டார். உடனே கண்ணன் அவர் முன்னர் தோன்றி, “பக்திக்கும் துறவுக்கும் பொறுமை அவசியம். அது உன்னிடம் இருக்கிறதா என்பதை அறியவே நான் இவ்விதம் நடந்து கொண்டேன். இனி என்னைக் காண வேண்டும் என்றால் நீ அனந்தன் காட்டுக்குத்தான் வரவேண்டும்” என்று கூறிவிட்டு மறைந்தார்.
தன் தவற்றை உணர்ந்த முதியவர், அனந்தன் காட்டைத் தேடி அலைந்தார். ஒவ்வொரு இடமாகத் தேடி, களைத்துப் போய், ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அருகே உள்ள ஒரு குடிசையில் கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கோபத்தில் கணவன் மனைவியைப் பார்த்து, “இவ்விதம் சண்டையிட்டால் அனந்தன் காட்டுக்கு அழைத்துச் சென்று விட்டு விடுவேன்” என்று கூறினான்.
இதைக் கேட்ட முதியவர் மகிழ்ச்சி அடைந்தார். அனந்தன் காடு இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்த ஒருவர் கிடைத்துவிட்டார் என்று துள்ளிக் குதித்தார். உடனே அந்த குடிசைக்குள் சென்று அவர்களை சமாதானப்படுத்தினார். அனந்தன் காடு குறித்தும் வினவினார். அந்த இளைஞனும் காட்டைக் காட்டினான்.
கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவலில், அவன் காட்டிய வழியில் சென்றார். நடைபாதை கல்லும் முள்ளுமாக இருந்தது. இருப்பினும் நடக்கத் தொடங்கினார். நிறைவாக பகவானைக் கண்டார். ஆனால் பகவான், உன்னிக் கண்ணனாக இல்லாமல் ஓர் இலுப்பை மரத்தடியில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அனந்தன் என்ற பாம்பின் மீது பள்ளிக் கொண்டிருக்கும் பரந்தாமனாகக் காட்சி அளித்தார்.
மகிழ்ச்சி அடைந்த முதியவர், பரந்தாமனை வணங்கினார். பரந்தாமன் முதியவரை மீண்டும் சீண்டினார். தனக்கு பசி எடுப்பதாக பரந்தாமன் கூறியதும், காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிறட்டையில் வைத்துக் கொடுத்தார் முதியவர். பரந்தாமனைப் பார்த்த தகவலை, முதியவர் திருவிதாங்கூர் மன்னருக்குத் தெரிவித்தார்.
மன்னர், எட்டு மடங்களில் உள்ள விற்பன்னர்களை அழைத்துக் கொண்டு அனந்தன் காட்டுக்கு வந்தார். ஆனால் அங்கு சுவாமி இல்லை. இருப்பினும், அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவருக்கு ‘பத்மநாப சுவாமி’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அனந்த சயனம் என்ற யோக நித்திரையில் (முடிவற்ற உறக்க நிலை, துயிலும் நிலை) ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் பெருமாள்.
கோயில் அமைப்பும் சிறப்பும்: 1686-ம் ஆண்டு கோயில் வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் இலுப்பை மரத்தால் ஆன சுவாமி விக்கிரகம் சேதம் அடைந்தது. 1729-ம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மாவின் முயற்சியால் மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12,008 சாளக்கிராமத்தாலும் ‘கடுசர்க்கரா’ என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட 18 அடி நீளமுடைய அனந்தசயன மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர், 1750-ம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா, தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் ஸ்ரீஅனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து தன் உடைவாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதி அடைந்தார்.
100 அடி உயரத்துடன் 7 நிலைகள் கொண்ட ராஜ கோபுரத்துடன் திருவனந்தபுரம் கோயில் அமைந்துள்ளது. ஹேமகூட விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் வீற்றிருக்கிறார். பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசிக்க வேண்டும். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரசிம்மரும், சந்நிதிக்கு பின்னர் கிருஷ்ணரும் அருள்பாலிக்கின்றனர். இத்தலத்து அனுமன் மீது சாத்தப்படும் வெண்ணெய் ஒருநாளும் உருகாது. கெட்டுப் போகாது. தெற்கு பகுதியில் லட்சுமி வராகர் மற்றும் ஸ்ரீநிவாசர் கோயில்கள் உள்ளன.
ஸ்கந்த புராணம், பத்ம புராணங்களில் இத்தலம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இத்தலம் அமைந்துள்ள இடம், பரசுராமர் க்ஷேத்திரம் என்று அறியப்படுகிறது.
திருவிழாக்கள்: மீனம் (பங்குனி)மற்றும் துலா (ஐப்பசி)மாதங்களில் பத்து நாட்களுக்கு திருவிழா நடைபெறும். நிறைவு நாளில் ஆராட்டு விழா நடைபெறும். திருவிழா நாட்களில் கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். நவராத்திரி, சுவாதி இசை விழா, லட்ச தீப நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட, கல்வியில் சிறந்து விளங்க பெருமாள் அருள்புரிவார்.