Published : 06 Nov 2022 06:28 AM
Last Updated : 06 Nov 2022 06:28 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 50 | காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோயில் 

காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோயில் 

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருஊரகம் உலகளந்த பெருமாள் கோயில் 50-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

இத்தலத்தை திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கையாழ்வார் பாசுரம்:

கல்லெடுத்து கல்மாரி காத்தா என்றும்

காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்

வில்லுறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்

வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்

மல்லடர்த்து மல்லரை யன்றட்டா யென்றும்

மாகீண்ட கைத்தலதென் மைந்தா வென்றும்

சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே யென்று

துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே.

(2064 – திருநெடுந்தாண்டகம் - 13)

மூலவர்: உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமப் பெருமாள்

உற்சவர்: பேரகத்தான்

தாயார்: அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி

தீர்த்தம்: நாக தீர்த்தம்

தலவரலாறு

பெருமாள் 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்டு நெடிது உயர்ந்து தனது இடதுகாலை விண்ணோக்கி தூக்கியும், இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தியும், வலது கரத்தில் ஒரு விரலை உயர்த்தியும், மேற்கு நோக்கி திரிவிக்கிரம வடிவத்தில் காட்சியளிக்கிறார்.

இக்கோயிலின் பிரகாரத்திலேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இப்படி ஒரே இடத்தில் 4 திவ்ய தேச பெருமாளைக் காணலாம். இது மிகவும் சிறப்பான ஒன்றாகும். வேறு எங்கும் இதைப்போல் ஒரே கோயிலில் 4 திவ்ய தேசங்களைக் காண முடியாது. இது காஞ்சிக்குக் கிடைத்த பெரும்பேறு ஆகும்.


பெருமாள் சந்நிதி அருகே பகவான் ஆதிசேஷனாக திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார்.

மகாபலி அசுரேந்திரனாக முடி சூட்டிக் கொண்டதும் அவனுடைய ஆணை 3 உலகங்களிலும் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் தேவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தேவர்களின் கஷ்டங்களைப் போக்கவும், மகாபலியின் கொட்டத்தை அடக்கவும், திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் சென்று நிம்மதியாக பகவானைத் தியானிக்க தனக்கென்று ஓர் இடம் தேவைப்படுகிறது. அதை அளித்தால் நன்மையாக இருக்கும் என்று கேட்டார்.

மகாபலியும் இதற்கு உடன்பட்டு தேவையான அளவு இடத்தை எடுத்துக் கொள்ளக் கூறினார். உடனே திருமால் திரிவிக்கிரம வடிவம் எடுத்து தன்னுடைய ஒரு திருவடியால் மேலுலகத்தையும் மற்றொரு திருவடியால் கீழுலகத்தையும் அளந்தார்.

மூன்றாவது அடிக்கு இடமில்லை என மகாபலியிடம் வாமனர் கூற, அதற்கு மகாபலி அடியேனின் சிரசு இருக்கிறது என்று கூறி தனது தலையைக் கொடுத்தான். திரிவிக்கிரமர் தன் பாதத்தை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி அவனை பாதாள லோகத்தில் கொண்டு சேர்த்தார். மீண்டும் மூன்று லோகத்தையும் இந்திரனிடம் இருக்குமாறு செய்தார்.

அப்போதுமகாபலி, பகவான் திருக்கோலத்தை முழுமையாகக் காண இயலவில்லை என்றெண்ணி பாதாள உலகத்தில் பெருமாளை நோக்கித் தவம் செய்தான். தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள், இந்தத் தலத்திலேயே மகாபலிக்கு, உலகளந்த திருக்கோலத்தை மறுபடியும் காட்சியாகத் தந்தார்.

மகாபலியோ நிரந்தரமாக, தான் அந்த உருவை தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பேராவல் கொண்டதால் பாதாள உலகத்து ஜீவன்களில் ஒன்றான ஐந்து தலை நாகமாக காட்சி தந்தார் திருமால்.

அதாவது அந்த நாகத்தைப் பார்த்தால் அவனுக்கு ஆதிசேஷன் நினைவுக்கு வரவேண்டும். ஆதிசேஷன் நினைவுக்கு வந்தால் அதில் பள்ளி கொண்ட பரந்தாமன் நினைவுக்கு வருவார். கூடவே இந்த உலகளந்த மாபெரும் தோற்றமும் நினைவுக்கு வரும் என்று திருமால் நினைத்தார் போலிருக்கிறது.

இந்த நாகத் தோற்றத்தைத் தான் இந்த கோயில் வளாகத்தில் திவ்ய தேசப் பெருமாளாக தரிசிக்கிறோம்.

நாகம் என்றாலே பால் நிவேதனம் என்ற பாரம்பரிய ஆராதனை சம்பிரதாயமும் உடன் வருகிறது. ஆதிசேஷன் பாற்கடலில் திருமாலுக்குப் படுக்கையாக இருப்பதும் இதே தொடர்பை ஒட்டித்தான் உள்ளது.

அதனால்தான் ஆதிசேஷன் முதல் சிறு நாகம் வரை பாம்புக்கு பால் வார்க்கும் மரபு இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வகையில் இந்த திரு ஊரகத்தானுக்கும் பால் பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது. தெற்கு நோக்கி காட்சிதரும் திரு ஊரகத்தானுக்கு பால் பாயசம் நிவேதித்தால் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், ராகு கேது தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. முக்கியமாக வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் திரு ஊரகத்தானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இத்தலப் பெருமாளை வணங்கினால், அனைத்து பாவங்களும் மன்னிக்கப் பெற்று, அவர் அனுக்கிரகம் கிடைக்கும்.

வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x