

108 வைணவ திவ்ய தேசங்களில் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ள திருநீரகத்தான் கோயில் 47-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே (8)
(இரண்டாம் ஆயிரம் - 2058 திருநெடுந்தாண்டகம்)
மூலவர்: திருநீரகத்தான்
உற்சவர்: ஜெகதீசப் பெருமாள்
தாயார்: நிலமங்கை வல்லி
தீர்த்தம்: அக்ரூர தீர்த்தம்
தலவரலாறு
திருநீரகத்தான் ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் இரண்டையும் சம்பந்தப்படுத்தியவர். குரூரமற்றவர் என்ற பொருளில் வரும் அக்ரூரர் என்ற பக்தருக்கு இவர் இங்கு தரிசனம் தந்திருக்கிறார். உற்சவராக ஜகதீஸ்வரர் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
கிருஷ்ணாவதாரத்து அக்ரூரர், ராமாவதாரத்தில் சுமந்திரனாகப் பிறந்தவர். தசரதனின் முதன்மை அமைச்சராகவும் தேரோட்டியாகவும் பொறுப்பு வகித்தவர். கைகேயின் சூழ்ச்சியால் ராமன் காட்டுக்கு போகவேண்டிய நிர்பந்தத்தில் அவனைத் தேரிலேற்றி, கானகம் அழைத்துச் செல்லும் துர்பாக்கிய பணியை சுமந்திரன் மேற்கொள்ள வேண்டியிருந்தது. காட்டில் ராமனை விட்டுவிட்டு, அவனைப் பிரிய மனமில்லாமல் கதறி அழுது, வேதனைப் பட்டார் சுமந்திரன்.
அவரது தேர்க் குதிரைகளும் மவுனமாக கண்ணீர் விட்டன. இதைக் கண்ட ராமபிரான், பிறிதொரு ஜென்மத்தில் ஒரு சந்தோஷ சூழ்நிலையில் தனக்காக சுமந்திரன் தேரோட்டிச் செல்ல வேண்டும் என்று உளம் கசிந்து நினைத்துக் கொண்டார். அந்த நெகிழ்ச்சியின் விளைவாகத்தான் அக்ரூரர் கிருஷ்ணாவதாரத்தின்போது பிறந்தார். ஆழ்ந்த கிருஷ்ண பக்தி கொண்டு தன்னையே முற்றிலும் கிருஷ்ணனுக்கே அர்ப்பணித்தார். ராமாவதார துன்பியல் சம்பவத்துக்கு மாற்றாக கிருஷ்ணர் அவரைத் தனக்குத் தேரோட்டும்படி பணித்தார்.
அதன்படி பிருந்தாவனத்தில் இருந்து வடமதுரைக்கு கிருஷ்ணரை தேரில் அமர்த்தி, வழி நெடுக பூச்சொரியும் உன்னதமான சூழலில் அழைத்துச் சென்றார் அக்ரூரர். இந்த இனிய சம்பவத்தை ‘அக்ரூரர் ஆகமனம்’ என்று ஸ்ரீமத் பாகவதம் சிறப்பித்துக் கூறுகிறது. இனியொரு பிறவி வேண்டேன் என்ற பூரணமான மகிழ்ச்சியில் திளைத்தார் அக்ரூரர்.
அவர் மட்டுமல்ல… ராமனை கானகத்துக்கு கொண்டு சென்ற பாவத்தைப் புரிந்து வருந்திய குதிரைகள், தாம் இழுக்கும் தேருக்கு கிருஷ்ணரே தேரோட்டியாக அமைந்து ஓட்டிச் சென்ற பெரும் பாக்கியத்தைப் பெற்றன.
அக்ரூர முனிவருக்கு முன்வினைப்பயன் காரணமாக தெய்வ சாபங்கள் இருந்தன. கங்கையில் மூழ்கியும் அந்தப் பாவங்கள் விலகவில்லை.
நிறைவாக காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஜகதீஸ்வரர் சந்நிதிக்குச் சென்று பிரார்த்தனை செய்தால் தோஷம் விலகும் என்று கேள்விப்பட்டு அக்ரூர முனிவர் இங்கு வந்தார். அப்போது இத்தலம் அருகே தனக்கென்று ஒரு புஷ்கரணியை உருவாக்கி அதில் நீராடினார். ஜகதீஸ்வரப் பெருமாள் அவருக்கு காட்சி கொடுத்து அவரது சாபங்களைப் போக்கினார். அன்று முதல் இங்குள்ள புஷ்கரணிக்கு அக்ரூர புஷ்கரணி என்று பெயர்.
எல்லா உயிர்களுக்குள்ளும் தான் இருப்பதையும் அதைவிட எல்லா உயிர்களும் தானே என்னுமாறு அக்ரூரருக்கும் பேரின்பத்தை அளிக்கும் வண்ணம், யமுனை நீரின் தன்மை கொண்ட திருநீரகத்தான் தரிசனம் நல்கினான் என்பதற்கு சாட்சியாக இந்த அக்ரூர தீர்த்தத்தைக் கூறலாம்.
திருநீர்மலையில் நீர்வண்ணனாக திருமாலைக் கண்டு, அதன்பிறகு இங்கே காஞ்சியில், மீண்டும் அதே நீர்வண்ணனாக திருநீரகத்தானை தரிசித்திருக்கிறார் திருமங்கையாழ்வார்.
வைகுண்ட ஏகாதசி விழா இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முன் ஜென்ம பாபங்கள் விலக, பெரியோர் செய்த தவற்றைப் போக்க, எதிர்கால சந்ததிகள் சாபங்களால் அவதியுறாமல் இருக்க, வாழ்க்கை தடம் மாறாமல் இருக்க, நோய் நொடிகள் வராமல் தடுக்க, குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட இத்தலத்தில் வழிபாடு செய்தால், உரிய பலன்கள் கிடைக்கும்.