

தூத்துக்குடி/ திருநெல்வேலி/ தென்காசி/ கோவில்பட்டி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகாலை முதலே திருச்செந்தூரில் குவிய தொடங்கினர். அங்கு நேற்று காலை முதலே வெயில் இல்லாமல் இதமான சூழ்நிலை காணப்பட்டது.
இதனால் காலை முதலே பக்தர்கள் கடற்கரைக்கு வந்து சூரசம்ஹாரத்தை காண இடம்பிடித்து காத்துக்கிடந்தனர். மதியத்துக்கு மேல் கடற்கரையில் கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தொடங்கிய போது லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்திருந்தனர். கடற்கரையெங்கும் மனித தலைகளாகவே காட்சியளித்தன.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் கந்தசஷ்டி விழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு இவ்விழா பக்தர்கள் கலந்து கொண்டதால் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.
விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பவானி சுப்பராயன், புகழேந்தி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன், அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் பங்கேற்றனர்.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங் காங்கே அன்னதானம், குடிநீர், குளிர் பானம் விநியோகம் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவின் தரம், சுகாதாரம் குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சுவாமி தரிசனம்: அதிகாலை 1 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு பக்தர்கள் கோயில் உள்பிரகாரத்தில் தங்கி விரதமிருக்க அனுமதி அளிக்கப்பட வில்லை. பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகத்தில் 18 இடங்களில் தற்காலிக தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி விரதமிருந்தனர். இந்த கொட்டகைகளில் போதிய கழிப்பறைகள் இல்லை என பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
கார் பாஸ்: இந்த ஆண்டு கார் பாஸ் வழங்குவது வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது. முக்கிய பிரமுகர்களுக்காக பச்சை நிறத்தில் மட்டும் 2,000 பாஸ்கள் வழங்கப்பட்டன. இந்த பாஸ் வைத்திருந்த வாகனங்கள் மட்டும் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்கள் அனைத்தும் நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டன. நகரப் பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்பட்டது. பக்தர்கள் நடந்தே கோயிலுக்கு வந்தனர்.
நகருக்கு வெளியே நான்கு இடங் களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. அனைத்து பேருந்துகளும் இங்கு நிறுத்தப்பட்டன. பேருந்து நிலையங்களில் இருந்து கோயிலுக்கு நகர பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. இதில் பயணிக்க ஒருவருக்கு ஆட்டோவில் ரூ.20-ம் பேருந்தில் ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண் காணித்தனர்.
பலத்த பாதுகாப்பு: சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருநெல்வேலி சரக டிஜஜி பிரவேஷ் குமார் தலைமையில் 7 எஸ்பிக்கள் மேற்பார்வையில் 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டு பைனாகுலர் மூலம் கடற்கரையை போலீஸார் கண்காணித்தனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.
கோயிலை சுற்றி 7 இடங்களில் பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப் பட்டிருந்தன. இந்த திரைகள் முன்பு பக்தர்கள் திரண்டு சூரசம்ஹாரத்தை கண்டுகளித்தனர். கடற்கரை பகுதி முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்பு படகு மற்றும் மிதவைகளுடன் பணியில் ஈடுபட்டனர்.
மெரைன் போலீஸார் கடற்கரை பகுதியில் படகு மூலம் ரோந்து சுற்றி வந்தனர். கோவை சம்பவத்தை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர் கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அனைத்து பணிகளையும் ஒருங் கிணைக்க இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்கள். துணை ஆணை யர்கள். உதவி ஆணையர்கள் 120 பேர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
திருநெல்வேலி: கந்த சஷ்டி விழாவையொட்டி திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலில் நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சுவாமி வீதியுலா நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் நேற்று காலையில் 108 சங்காபிஷேகம், ருத்திர ஏகாதசி, தாரா ஹோமம் நடைபெற்றது. மாலையில் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெற்றது.
திருநெல்வலி நெல்லையப்பர் கோயிலில் சுப்பிரமணியர் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு, சந்தி விநாயகர் கோயில் முன்பு எழுந்தருளினார். வேணுவன குமாரர் கோயிலில் இருந்து வேல் வாங்கி வாந்து மேலரதவீதியில் பரமேஸ்வரி அம்மன் கோயில் முன்பு உட்பட 3 இடங்களில் கஜமுகாசூரன், சிங்கமுகாசூரனை சுப்பிரமணியர் சம்ஹாரம் செய்தார்.
பின்னர் வடக்கு ரதவீதியில் கோயில் வடக்கு வாசல் முன்பு வெள்ளிக் குதிரை வாகனத்தில் வந்த சுப்பிரமணியர், சூரபத்மனை விரட்டிச் சென்று ஈசானம் எனப்படும் குத்துப்பிறை முக்கில் வைத்து சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கேடிசி நகர்: பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வட பகுதி பாரதி நகர் 4-ல் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் கடந்த 25ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. முருகப்பெருமான் மூலவர் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் சுவாமிகளுக்கு தினந்தோறும் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் இன்று மாலை 3 மணிக்கு மேல் கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மாலை 5-30 மணிக்கு திருமண விருந்தும், 6-30 மணிக்கு மேல் மயில் வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை செல்வவிநாயகர் அறக்கட்டளை நிர்வாகி சிவன் பிள்ளை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
தென்காசி: இதுபோல் தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயில், பாபநாசம் பாபநாச நாதர் கோயில், சேரன்மகாதேவி வைத்தியநாத சுவாமி கோயில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ம் தேதி காப்பு அணிவித்தலுடன் தொடங்கி நடந்து வருகிறது. 5-ம் நாளான நேற்று முன்தினம் தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. விழாவின் 6-ம் நாளான நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. பகல் 12 மணிக்கு சண்முகர் அர்ச்சனை, சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலை 4 மணிக்கு சுவாமி கழுகாசலமூர்த்தி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் போர்களத்துக்கு புறப்பட்டார். சிங்கமுகசூரன், பானுகோபன், தர்மகோபன் மற்றும் சூரபத்மனை, கழுகாசலமூர்த்தி வதம் செய்தார். இரவு 7 மணிக்கு சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமி, வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. நவ.2-ம் தேதி இரவு 7.31 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் கந்த சஷ்டி விழாவில் நேற்று காலை 10.30 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், 11 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சமேத அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தது.
இரவு 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, யானைமுக சூரன், சிங்கமுகா சூரன், தாரகாசூரன், பானுகோபன், சூர பத்மன் ஆகியோரை வதம் செய்தார். கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் சஷ்டி விழா நிறைவாக காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்கார தீபாரதனை நடந்தது. விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயில், பசுவந்தனை கைலாசநாதர் சுவாமி கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.