

108 வைணவ திவ்ய தேசங்களில், தஞ்சை மாவட்டம் திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் கோயில், 22-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. வாமன அவதாரத்துடன் தொடர்புடைய இத்தலம், நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்டுள்ள சிறப்பைக் கொண்டது.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும்தான் கருடாழ்வார் சங்கு, சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்தில் ஒரே ஒரு முறை தார்போடுவது தனிச்சிறப்பு.
சுக்ரபுரி என்ற பெயர் கொண்ட இத்தலம், நவக்கிரகங்களில் சுக்கிரனால் (வெள்ளி) தவம் இயற்றி வழிபடப்பட்டுள்ளது. விஷ்ணு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத்தால் போற்றப்படும் இத்தலம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
ஆநிரை மேய்த்து அன்று அலைகடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை உருட்டி
கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே.
மூலவர்: கோலவில்லி ராமர், ஸ்ரீராப்தி நாதன்
உற்சவர்: சிருங்கார சுந்தரர்
தாயார்: மரகதவல்லி
தல விருட்சம்: செவ்வாழை
தீர்த்தம்: சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்
ஆகமம் / பூஜை: வைகானஸம்
விமானம்: புஷ்கலா வர்த்தக விமானம்
தல வரலாறு
திருமால் வாமன அவதாரம் எடுத்த சமயத்தில், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். மன்னரும் தாரை வார்த்துக் கொடுக்க சம்மதித்தார். வந்திருப்பவர் திருமால் என்பதை உணர்ந்த சுக்கிராச்சாரியார், ஒரு வண்டாக உருவம் எடுத்து, தாரை வார்க்கும் செப்புக் குடத்தின் (கமண்டலம்) துவாரத்தை அடைத்துவிட்டார். சுக்கிராச்சாரியாரின் செயலை அறிந்த திருமால், ஒரு குச்சியை வைத்து துவாரத்தை குத்தும்போது, சுக்கிராச்சாரியார், ஒரு கண்ணை இழக்கிறார். ஒளியிழந்த கண்ணுடன், பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு, நிறைவாக இத்தல பெருமாளை தரிசித்து, மீண்டும் பார்வை பெற்றார் சுக்கிராச்சாரியார். இதனால் இத்தலம் வெள்ளியங்குடி (சுக்கிரன் - வெள்ளி) என்று அழைக்கப்படுகிறது.
கோலவில்லி ராமர்
தேவ சிற்பி விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகான கோயில்களைக் கட்டுவதுபோல், தன்னால் செய்ய இயலவில்லையே என்று அசுர குல சிற்பி மயன் வருத்தம் கொண்டார். இதுகுறித்து பிரம்மதேவரிடம் கூறினார் மயன். இத்தலத்தில் தவம் மேற்கொண்டால், வேண்டியது கிடைக்கும் என்று பிரம்மதேவரின் ஆலோசனைப்படி, மயன் இங்கு தவம் இயற்றினார், மயனின் தவத்தில் மகிழ்ந்த திருமால், அவருக்கு சங்கு சக்ரதாரியாக காட்சியளித்தார்.
தனக்கு ராமாவதாரக் காட்சியைக் காண வேண்டும் என்று மயன் தெரிவிக்க, அதன்படி, தனது சங்கு, சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு, கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் மயனுக்கு காட்சி கொடுத்தார் திருமால். இத்தலத்தில் தவம் மேற்கொள்ள சுக்கிராச்சாரியார் வந்ததால், ‘வெள்ளியங்குடி’ என்று இவ்வூர் பெயர் பெற்றது.
சுக்கிரத் தலம்
திருவெள்ளியங்குடி பெருமாளை தரிசித்தால் 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒளியிழந்த கண்களோடு தவித்த சுக்கிராச்சாரியார், ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இத்தலத்தில் அணையா தீபமாக பிரகாசிக்கிறார். அதனால் இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத் தலமாகப் போற்றப்படுகிறது.
கோயில் சிறப்பு
இத்தலம் 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. பெருமாள் கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட கோலத்தில், வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார். அலங்காரம் செய்துகொண்டு சிருங்காரமாக காட்சியளிப்பதால், இத்தல உற்சவருக்கு சிருங்கார சுந்தர் என்ற பெயர் கிட்டியது.
இத்தலத்தில் பராசரர் முனிவர், மார்க்கண்டேயர், இந்திரன், பிரம்மதேவர், பூமிதேவி வழிபாடு செய்துள்ளனர். காஞ்சி மகா பெரியவர், இத்தலத்தில் தங்கி திருப்பணிகள் செய்துள்ளார். இத்தலம் கிருதயுகத்தில் பிரம்மபுத்திரம் என்றும், துவாபரயுகத்தில் சைந்திர நகரம் என்றும், திரேதாயுகத்தில் பராசரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. தற்போது கலியுகத்தில் பார்க்கவபுரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தருகே உள்ள சேங்கனூரில் வைணவ ஆச்சாரியர் பெரியவாச்சான் பிள்ளை அவதரித்துள்ளார்.
திருவிழாக்கள்
ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்காத்திகை விழா, வைகுண்ட ஏகாதசி வைபவ தினங்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி, தாயார் வீதியுலா வருவது வழக்கம்.
அமைவிடம்: குடந்தை - அணைக்கரை சாலையில் உள்ள இவ்வூர் குடந்தையில் இருந்து 18 கிமீ தொலைவிலும், சோழபுரத்தில் இருந்து 6 கிமீ தொலைவிலும், திருப்பனந்தாளில் இருந்து 6 கிமீ தொலைவிலும் உள்ளது.