Published : 18 Oct 2022 05:35 PM
Last Updated : 18 Oct 2022 05:35 PM

108 வைணவ திவ்ய தேச உலா - 20 | தஞ்சை நீலமேகப் பெருமாள் கோயில் 

தஞ்சை நீலமேகப் பெருமாள் கோயில் 

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில், தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில், 20-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.


திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி) பாசுரம்:

எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம்

எனக்கர சென்னுட்டை வானாள்

அம்பினா லரக்கர் வெருக்கொன நெருக்கி

அவருயிர் செகுந்தவெம் மண்ணல்

வம்புலாஞ்ச் சோலைமாமதில் தஞ்சை

மாமணிக் கோயிலே வணங்கி

நம்பிகான் உய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா வென்னும் நாமம்

மூலவர்: நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர்

உற்சவர்: நாராயணர்

தாயார்: செங்கமலவல்லி, அம்புஜவல்லி, தஞ்சை நாயகி

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், கன்னிகா புஷ்கரிணி, வெண்ணாறு, ஸ்ரீராம தீர்த்தம், சூர்ய புஷ்கரிணி

தல விருட்சம்: மகிழ மரம்

விமானம்: வேத சுந்தர விமானம், மணிக்கூடம் விமானம்


தல வரலாறு

திரேதா யுகத்தில் தஞ்சகன், தண்டகன், தாடகன் ஆகிய மூன்று அசுரர்கள் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தனர். சிவபெருமான் இவர்களின் தவத்தில் மகிழ்ந்து, தன்னால் எந்தத் துன்பமும் ஏற்படாது என்று உறுதியளித்தார். சிவபெருமான் அளித்த வரத்தால் கர்வம் கொண்ட அசுரர்கள், அனைத்து முனிவர்கள், ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தனர்.

பராசரர் முனிவர், பாற்கடலைக் கடைந்து கிடைத்த அமுதத்தை மணிமுத்தா நதியில் விட்டு, பசுமையான வயல்கள் சூழ்ந்த வெண்ணாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து ஹரிநாமம் உச்சரித்து, சீடர்களுக்கு உபதேசம், தவம் செய்து வந்தார். தவம் செய்யும் முனிவரை அந்த இடத்தைவிட்டு துரத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அசுரர்கள், அவருக்கு பல்வேறு விதங்களில் இன்னல்கள் கொடுத்து வந்தனர். பராசரர் முனிவர் அசுரர்களை திருத்த எண்ணி பல அறிவுரைகளை வழங்கினார். ஆனால் அவற்றை ஏற்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. வருத்தமடைந்த முனிவர், இதுகுறித்து திருமாலிடம் முறையிட்டார்.

பக்தர்களைக் காக்க ஓடோடி வரும் திருமால், முனிவரைக் காக்க கருட வாகனத்தில் எழுந்தருளி அவரது ஆசிரமத்துக்கு வந்தார். ‘கஜமுக’ வடிவம் கொண்டு தஞ்சகன், ‘நரசிம்மயாளி’ வடிவில் வந்த திருமாலுடன் போரிட்டான். தஞ்சகனை சக்ராயுதத்தால் தோற்கடித்தார் திருமால். திருமாலிடம் தஞ்சகன் சரணடைந்ததால், இவ்வூர் ‘தஞ்சகனூர்’ என்று அழைக்கப்படுகிறது. நாளடைவில் இவ்வூர் தஞ்சாவூர் என்றும், திருமால் நரசிம்மயாழி வடிவம் கொண்டு போரிட்டதால், இவ்வூர் ‘தஞ்சையாழி’ என்றும் அழைக்கப்படுகிறது.

தண்டகாரண்யத்தில் வராக மூர்த்தியால் தண்டகனும், கிருஷ்ணாவதாரத்தின்போது காளிதேவியால் தாடகனும் வதம் செய்யப்பட்டனர். அரக்கர்களின் வதத்துக்குப் பிறகு, பராசரர் முனிவருக்கு நீலமேகப் பெருமாளாக திருமால் காட்சியளித்தார்.

மேலும் பக்தர்களுக்காக, வெண்ணாற்றங்கரையில் திருமால், மூன்று கோயில்களில், கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவை, செங்கமலவல்லித் தாயார் சமேத நீலமேகப் பெருமாள் கோயில், அம்புஜவல்லித் தாயார் சமேத மணிகுன்றப் பெருமாள் கோயில், தஞ்சைநாயகித் தாயார் சமேத வீரநரசிம்ம பெருமாள் கோயில் ஆகும்.

பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மூன்று கோயில்களையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளதால், மூன்று கோயில்களுமே சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். உற்சவர் நீலமேகப் பெருமாள் கையில் செங்கோல் ஏந்தியும், உற்சவர் செங்கமலவல்லித் தாயார் அக்னி கிரீடம் அணிந்து சாந்த ரூபத்திலும் அருள்பாலிக்கின்றனர். அருகே பராசரர் பெருமாளை வணங்கியபடி உள்ளார். வடக்கு பார்த்தபடி லட்சுமியுடன் ஹயக்ரீவர் அருள்பாலிக்கிறார்.

பஞ்ச நரசிம்மர் அருள்

சிங்கப் பெருமாள் கோவிலில் வீர நரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சந்நிதி தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என்று இத்தலத்தில் பஞ்ச நரசிம்மர்கள் அருள்பாலிக்கின்றனர்.

வீரநரசிம்மர் கோவில் சக்கரத்தில் பெருமாளே சக்கரத்தாழ்வாராக அருள்பாலிக்கிறார். சக்கரத்தாழ்வார், வலப்புறத்தில் உள்ள யானையின் (தஞ்சகன்) மீது ஒரு கை வைத்தபடி உள்ளார். இவரது பின்புறத்தில் உள்ள யோக நரசிம்மர் அருகே இரண்யகசிபு மற்றும் பிரகலாதன் உள்ளனர்.

நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள நரசிம்மரின் வலப்புறத்தில் மகாலட்சுமி அமர்ந்துள்ளதால், இந்த நரசிம்மர், ‘வலவந்தை நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். அசுரனை அழித்துவிட்டு வந்த நரசிம்மர் கோபம் தணியாமல் இருப்பதால், அவருக்கு வலப்புறம் வந்து மகாலட்சுமி அமர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதிகக் கோபம் உடையவர்கள், இத்தல இறைவனை வணங்கினால் மன அமைதி பெறலாம் என்பது ஐதீகம்.

இந்த மூன்று கோயில்களும் மாமணி கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தலம் பராசர ஷேத்ரம், அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், வம்புலாஞ்சோலை, தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மூன்று பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x