

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத் தவர் உள்ளிருந்தோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே..
வள்ளலார் அருளிய இந்தத் திருவருட்பா பாடலை பிரதோஷ தினங்களில் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் டி.ஆர்.விஸ்வநாதனின் கணீர் குரலில் ஒலிக்கக் கேட்கலாம். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவரது கம்பீரக் குரல் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கபாலீஸ்வரர் சன்னிதியில் பக்தி மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது. இவர் தற்போது எழுபது வயதைக் கடந்திருக்கிறார்.
திருத்துறைப்பூண்டி அருகே தலைஞாயிறை பூர்வீகமாக கொண்டது விஸ்வநாதனின் குடும்பம். இவரது தந்தை டி.ராமசாமியும் ஒரு பாடகர். திருவல்லிக்கேணியில் இருந்த ’திருப்புகழ் பஜன் மண்டலி’யின் ஆஸ்தான பாடகர். முறைப்படி சங்கீதம் படிக்கவில்லையென்றாலும் தனது மூத்த சகோதரி ‘பாகவத ரத்னா’ காந்திமதி சந்தானத்தின் வழிகாட்டலில் பஜனைப் பாடகராக தன்னைப் பட்டை தீட்டிக் கொண்டவர் விஸ்வநாதன். மந்தைவெளியில் உள்ள ‘ஞானானந்தா நாம சங்கீர்த்தன மண்டலி’யில் கடந்த இருபது வருடங்களாக ஆஸ்தானப் பாடகராக இருக்கும் இவர், 2000-லிருந்து கபாலீஸ்வரர் கோயிலில் சிவபுராணக் கச்சேரி நிகழ்த்துகிறார்.
பிரதோஷ மகிமையும் தத்துவமும்
சிவன் கோயில்களில் அண்மைக் காலமாக பிரதோஷ வழிபாடுகள் முக்கிய நிகழ்வாகி வந்தாலும் பலருக்கும் பிரதோஷ தினத்தின் முக்கியத்துவம் சரிவரத் தெரியவில்லை என்று சொல்லும் விஸ்வநாதன், பிரதோஷத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் ‘பிரதோஷ மகிமையும் தத்துவமும்’ என்ற நூலை இயற்றி இருக்கிறார்.
“ வெறும் சாதம் இறைவனுக்கு நைவேத்தியமானதும் பிரசாதமாவதுபோல் தோஷமுள்ள வேளையானது பிரதோஷ காலத்தில் தோஷமற்ற வேளையாக மாறுகிறது. துன்பங்களை நீக்கி இன்பத்தைத் தரவல்ல ஒரே வழிபாடு பிரதோஷ வழிபாடு தான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்ததால் வந்த ஆல கால விஷத்தை உண்டு அகிலம் காத்தார் சிவபெருமான். அந்த விஷத்தை அன்னை உமையவள் சிவபெருமானின் கண்டத்தில் நிறுத்தினாள். தங்களைக் காத்த சிவனை மறந்த தேவர்கள், பிறகு தவறை உணர்ந்து சிவனிடம் சரணாகதி அடைந்தார்கள்.
இதையடுத்து வந்த திரயோதசி நாளில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக ஈசன், நந்தியாண்டவரின் இரு கொம்புகளுக்கு இடையில் சந்தியா நர்த்தனம் ஆடினார். அப்போது சரஸ்வதி தேவி வீணை வாசித்தாள், இந்திரன் குழல் இசைத்தான், பிரம்ம தேவன் தாளம் அமைத்தார். இலக்குமி தேவி இன்னிசை பொழிந்தாள். இதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கண்டு களித்தனர். தேவி உடனிருக்க ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி அனைவருக்கும் சிவபெருமான் காட்சி கொடுத்த அந்த வேளைதான் பிரதோஷ வேளை.
தூது செல்லும் நந்திதேவன்
தேவர்களின் குறைகளை எல்லாம் கேட்டறிந்து அதை சிபெருமானிடம் தெரிவிக்கும் தூதுவர் என்பதால் பிரதோஷ நாட்களில் நந்திதேவருக்கு பூஜை செய்த பிறகுதான் சிவனுக்கு பூஜை செய்கிறார்கள். தேவர்களுக்கே சிவபெருமானிடம் தூது செல்லும் நந்திதேவர் தங்களது குறைகளையும் சிவன் காதில் சொல்லுவார் என்ற நம்பிக்கையில்தான் பக்தர்கள் நந்தியின் காதில் தங்களது மனச்சுமைகளை இறக்கி வைத்துச் செல்கிறார்கள். பிரதோஷ நாட்களில் நந்தியாண்டவரின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமானைப் பார்த்து வணங்கினால் அனைத்து கஷ்டங்களும் நீங்கும் என்பது பொதுவான நம்பிக்கை.’’ என்கிறார்.