Published : 04 Aug 2022 04:39 PM
Last Updated : 04 Aug 2022 04:39 PM

‘கண்ட அனைத்திலும் கடவுள்’ - ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் வாசகத்தின் மேன்மை

கடவுளே மனித உருவில் வந்து, வாழ்வாங்கு வாழும் வழிதனை தம் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டிய அருளாளர்கள் பாரதப் பண்பாட்டின் நெடுகிலும் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

அனைத்து மதங்களின் வழிபாட்டு முறைகளையும் ஆழ்ந்து அனுபவித்து, உணர்ந்து மதம் கூறும் நல்வழிகளை வாழ்க்கை நடைமுறையில் கொண்டு வந்தவர் அவர். கடவுள் வழிபாட்டின் அத்தனை பாவனைகளும் மனித வாழ்வை மேம்படுத்தி இறைவனை அடையும் வழி என்று அனுபவித்து உணர்ந்தவர் ராமகிருஷ்ணர்.

தன் மனைவி சாரதாதேவியை அன்னை பராசக்தியின் வடிவமாக வழிபட்டு, பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் வடிவம் என்கிற பாரதப் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர்.

நோக்கம் ஒன்றுதான்:

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ‘கண்ட அனைத்திலும் கடவுள்’ என்ற தீர்க்கதரிசன வாசகத்தை எப்போதும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்து மதம் கூறும் வழிமுறைகளை மட்டுமல்லாமல், கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்த, சீக்கிய மதம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு முறைகளையும் கற்றுணர்ந்து அனைத்தும் இறைவனை அடையும் பல்வேறு வழிகள்தாம் என அறிவித்தார் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நன்மையிலும் தீமையிலும் அன்பிலும் பயங்கரத்திலும் சந்தோஷத்திலும் துக்கத்திலும் அழகிலும் அழகின்மையிலும் உயர்விலும் தாழ்விலும் ஒன்றொன்றுக்கு மாறுபட்ட அனைத்திலும் இறைவனைக் காணும் தாந்த்ரீக சாதனைகளை பைரவி பிராமணி அம்மையார் மூலம் அவர் கண்டறிந்தார். அதன் மூலம் அனைத்திலும் இறைவனைக் காணும் மனநிலையைப் பெற்றார்.

அனைத்தும் ஒன்றுதான்:

இழிந்ததையும் தெய்விகத்தையும் வேறுபடுத்தாமல் பார்த்தார். சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்களுடைய கழிவறையைக் கழுவிச் சுத்தப்படுத்தியிருக்கிறார். பிச்சைக்காரர்கள் உண்ட உணவில் எஞ்சியிருந்ததைச் சாப்பிட்டிருக்கிறார்.

தன் மனைவியையும் காமத்தை வென்றதால் புனிதமானவர்களையும் விலை மாதர்களையும் அன்னை பராசக்தியின் வடிவமாகவே ராமகிருஷ்ணர் வழிபட்டார். எல்லாவற்றையும் ஒன்றெனக் கருதும் அவரின் இந்த எண்ணம், எல்லோரையும் நேசிக்கவும் விருப்பு வெறுப்புகளைக் களையவும் சமுதாயத்திற்கு மிகத் தேவையான அவசியமான பண்பு.

மதுரபாவனையில் ஸ்ரீகிருஷ்ணனுக்காக ராமகிருஷ்ணர் ஏங்கித் தவித்தார். தன் அன்பனை விட்டுப் பிரிந்த தாபத்தால் சோகம் மேலிடக் கண்டார். கண்ணீர் தாரை தாரையாகப் பெருகியது. காதலனைப் பிரிந்த காதலியின் மனநிலையில் கிருஷ்ணனுக்காக ராமகிருஷ்ணரின் மனம் ஏங்கியது. இறுதியில் ஸ்ரீ கிருஷ்ணனின் காட்சி ராமகிருஷ்ணருக்குக் கிடைத்தது.

இல்லறத்தில் இருப்பவரும் குடும்ப வாழ்வில் இருந்துகொண்டே ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்து வாழ்வின் உயர் லட்சியத்தை அடைய முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை உலகிற்கு அவர் அளித்த கொடையாகும். நாம் பிறவி எடுத்ததன் நோக்கம் சரிவரப் புரியும்போது ராமகிருஷ்ணரின் பாதம் தொட்டு வணங்கி நம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வோம்.

(ஆகஸ்ட் 16: ஸ்ரீ ராமகிருஷ்ணர் நினைவு நாள்)

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x