

கடவுளே மனித உருவில் வந்து, வாழ்வாங்கு வாழும் வழிதனை தம் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டிய அருளாளர்கள் பாரதப் பண்பாட்டின் நெடுகிலும் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
அனைத்து மதங்களின் வழிபாட்டு முறைகளையும் ஆழ்ந்து அனுபவித்து, உணர்ந்து மதம் கூறும் நல்வழிகளை வாழ்க்கை நடைமுறையில் கொண்டு வந்தவர் அவர். கடவுள் வழிபாட்டின் அத்தனை பாவனைகளும் மனித வாழ்வை மேம்படுத்தி இறைவனை அடையும் வழி என்று அனுபவித்து உணர்ந்தவர் ராமகிருஷ்ணர்.
தன் மனைவி சாரதாதேவியை அன்னை பராசக்தியின் வடிவமாக வழிபட்டு, பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் வடிவம் என்கிற பாரதப் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர்.
நோக்கம் ஒன்றுதான்
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ‘கண்ட அனைத் திலும் கடவுள்’ என்ற தீர்க்கதரிசன வாசகத்தை எப்போதும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்துமதம் கூறும் வழிமுறைகளை மட்டுமல்லாமல், கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்த, சீக்கிய மதம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு முறைகளையும் கற்றுணர்ந்து அனைத்தும் இறைவனை அடையும் பல்வேறு வழிகள்தாம் என அறிவித்தார் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.
அனைத்திலும் தெய்வத்தை உணர்கிற வன் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டான். அனைத்து உயிர்களையும் இறைவடிவாக நேசிப்பவன் எல்லாரையும் நேசிக்கக் கற்றுக்கொள்வான். இங்கே பேதமை அகன்று அன்பு ஒன்று மட்டுமே நிலை கொள்ளும்.
காடுகள், மலைகள், நதிகள், உயிர்கள் அனைத்தும் இறை யம்சம் என்கிற உணர்வு மனிதனை ஆட்கொள்ளும்போது அனைத்தையும் போற்றும் எண்ணம் வளரத் தொடங்கு கிறது. இந்நிலை இன்றைய காலகட்டத்திற்கு மிகத் தேவையாக உள்ளது. ராமகிருஷ்ணர் கண்ட அனைத்திலும் இறைவன் என்கிற சிந்தனை உலகிற்கு அவர் அளித்த அருட்கொடையாகும்.
நன்மையிலும் தீமையிலும் அன்பிலும் பயங்கரத்திலும் சந்தோஷத்திலும் துக்கத்திலும் அழகிலும் அழகின்மையிலும் உயர்விலும் தாழ்விலும் ஒன்றொன் றுக்கு மாறுபட்ட அனைத்திலும் இறைவனைக் காணும் தாந்த்ரீக சாதனைகளை பைரவி பிராமணி அம்மையார் மூலம் அவர் கண்டறிந்தார். அதன் மூலம் அனைத் திலும் இறைவனைக் காணும் மனநிலையைப் பெற்றார்.
அனைத்தும் ஒன்றுதான்
இழிந்ததையும் தெய் விகத்தையும் வேறுபடுத்தாமல் பார்த்தார். சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்களுடைய கழிவறையைக் கழுவிச் சுத்தப்படுத்தியிருக்கிறார். பிச்சைக்காரர்கள் உண்ட உணவில் எஞ்சியிருந்ததைச் சாப்பிட்டி ருக்கிறார்.
தன் மனைவியையும் காமத்தை வென்றதால் புனிதமானவர்களையும் விலை மாதர்களையும் அன்னை பராசக்தியின் வடிவமாகவே ராமகிருஷ்ணர் வழிபட்டார். எல்லாவற்றையும் ஒன்றெனக் கருதும் அவரின் இந்த எண்ணம், எல்லோரையும் நேசிக்கவும் விருப்பு வெறுப்புகளைக் களையவும் சமுதாயத்திற்கு மிகத் தேவையான அவசியமான பண்பு.
வேற்றுமையில் ஒற்றுமை
ராமகிருஷ்ண பரமஹம்சரின் அணுகுமுறை வித்தியாசமானது. தான் வளர்த்துக்கொண்ட மனநிலைக்கு மாறுபட்ட சூழ்நிலையையும் மனமுவந்து ஏற்றுக்கொள்வதாகும். இது மிகவும் கடினமானதாகும். பராசக்தியின் தீவிர பக்தரான இவர், உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத இஸ்லாம் வழிபாட்டில் சாதனை படைத்தது, இயேசு கிறிஸ்துவைப் பற்றி உயர்வாகக் கூறியது இவை யாவும் குறிப்பிடத்தக்கவையாகும். அனைத்து மதங்களையும் ஆழ்ந்து அனுபவித்த ராமகிருஷ்ணரைப் போல் ஞானம் பெற்றவர் எவருமிலர். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது உயரிய பண்பை இது பிரதிபலிக்கிறது.
பாவனைகளில் மிளிரும் பக்தி
இறைவனைக் குழந்தையாகக் கருதி வழிபடும் வாத்சல்ய பாவனையை ஜடாதாரி என்கிற துறவி மூலம் கற்றார். தாய் தன் குழந்தையை நேசிப்பது போன்று இறைவனையே குழந்தை யாகக் கருதி வழிபட்டார். இறைவனை ஆண்டவனாகவும் தன்னை அவரின் அடிமையாகவும் வழிபடும் தாஸ்ய பாவனையைக் கடைப்பிடித்து வழிபட்டார்.
தான் கடவுளின் அடிமை என்கிற உணர்வுடன் வழிபடும் பக்தனுக்குத் தான் செய்யும் செயல்கள் யாவும் இறைவனுக்காக மட்டுமே என்கிற உணர்வு மேலோங்கும். அந்நிலையில் அர்ப்பணிப்புடன் கூடிய பணிவு பிறக்கும். அது மனிதனின் செயலை மேம்பட்ட நிலைக்கு எடுத்துச் செல்லும். அடுத்ததாக மதுரபாவனையைக் கடைப்பிடித்தார்.
தான் இறைவனின் நாயகி என்கிற உணர்வில் ஒன்றிடும் மதுரபாவனையில் பதவி, பெருமை, மரியாதை, செல்வம், குடும்ப உறவு, சுயநலம் போன்ற உலக எண்ணங்கள் துறக்கப்படுகின்றன. மதுர பாவனையில் சாதகன் உலகச் செல்வம் அனைத்தையும் துறந்து தன்னை முழுமையாக ஒப்படைக் கிறான்.
மதுரபாவனையில் ஸ்ரீகிருஷ்ணனுக்காக ராமகிருஷ்ணர் ஏங்கித் தவித்தார். தன் அன்பனை விட்டுப் பிரிந்த தாபத்தால் சோகம் மேலிடக் கண்டார். கண்ணீர் தாரை தாரையாகப் பெருகியது. காதலனைப் பிரிந்த காதலியின் மனநிலையில் கிருஷ்ணனுக் காக ராமகிருஷ்ணரின் மனம் ஏங்கியது. இறுதியில் ஸ்ரீ கிருஷ்ணனின் காட்சி ராமகிருஷ்ணருக்குக் கிடைத்தது.
சாதாரணக் குடும்ப உறவுகளின் வாழ்க்கை முறைகளையே இறைச் சிந்தனையை நோக்கிச் செலவிட்டு உயர்ந்த நிலையை அடைந்தார் ராமகிருஷ்ணர். அன்றாட வாழ்க்கைப் பணிகளை இறைசெயல்களாகச் செய்யும்போது பணிகளில் மேன்மையும் உள்ளத்தில் அகங்காரமின்மையும் பணிவும் மேம்படும் என்பதை ராமகிருஷ்ணரின் வாழ்வு நமக்கு உணர்த்துவதைக் கண்கூடாகக் காணலாம்.
இல்லறத்தில் இருப்பவரும் குடும்ப வாழ்வில் இருந்துகொண்டே ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்து வாழ்வின் உயர் லட்சியத்தை அடைய முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை உலகிற்கு அவர் அளித்த கொடையாகும். நாம் பிறவி எடுத்ததன் நோக்கம் சரிவரப் புரியும்போது ராமகிருஷ்ணரின் பாதம் தொட்டு வணங்கி நம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வோம்.
(ஆகஸ்ட் 16: ஸ்ரீ ராமகிருஷ்ணர் நினைவு நாள்)