

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |
அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 21-வது நாளில் அத்தி வரதர் ரோஜா நிறப் பட்டாடையில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க விடுமுறை நாட்களில் கூடுதலாக ஒருமணி நேரம் முன்னதாக நடை திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் டிஜிபி.திரிபாதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, அறநிலையத் துறை இணை ஆணையர்களும் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், டிஜிபி உடன் கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மூலம், சில திருத்தங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பக்தர்களுக்கு கூடுதலாக கழிவறை அமைக்க அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும், வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட்டும், பழச்சாறும் சுவாமி தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் மூலம் மேற்கண்டவற்றை பெற்று பக்தர்களுக்கு வழங்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த பணிகள் நடைபெறும். ட
பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்களில் கூடுதல் மின் விசிறிகளையும் பொருத்தவும் மற்றும் கோயிலுக்கு செல்லும் சாலைகளில் வழிகாட்டி பலகைகள் மற்றும் வரைபடங்கள் அமைக்கப்பட உள்ளன. பக்தர்களுக்கு சேவை மேற்கொள்ள, ஆயிரம் ஊர்க்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளர். இவர்கள், சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விடுமுறை நாட்களில், அதிகாலை நான்கு மணிக்கு தரிசனத்தை தொடங்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு பரிந்துரைத்துள்ளோம். மேலும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் மகிழ்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்.
இலவச தொலைபேசி எண்கள்
பக்தர்கள் அத்தி வரதர் தரிசன நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மற்றும் பக்தர்கள் ஒருங்கிணைப்பு மையம் செயல்பட உள்ளது. உதவி தேவைப்படும் நபர்கள் 18004258978, 044-27237425, 27237207ஆகிய தொலைபேசி எண்களை இலவசமாக தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம்" என தலைமை செயலாளர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.