

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 18-ம் நாளில் அத்தி வரதர் கத்தரிப்பூ நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
முதியோர் செல்லும் வரிசையில் அதிக அளவு முதியோர், மாற்றுத் திறனாளிகள் திரண்டுள்ளதால் அதிலும் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையில் முதியோர் சாலைகளில் வரிசையில் நின்றதால் கிழக்கு கோபுரம் பகுதியின் அருகே காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதியோர் வரிசையில் சென்றவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருந்தனர்.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டதால் மினி பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பலர் வரதராஜ பெருமாள்கோயிலில் இருந்து ரங்கசாமி குளம் வரை நடந்தே வந்தனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலைச் சுற்றி பக்தர்கள் குவிந்ததாலும், பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, சாலைகளில் வரிசையில் நின்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.