

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |
அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 13-ம் நாளில் அத்தி வரதர் பச்சை நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கோயில் சுற்றுப் பிரகாரங்களில் வரிசையில் செல்ல முடியாத அளவுக்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. பலர் மதுரை, திருச்செங்கோடு, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வந்ததாகத் தெரிவித்தனர்.
அத்தி வரதரை 24 மணி நேரமும் தரிசிக்கும் வகையில் நேரத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாச்சாரியார்களிடம் கலந்து பேசி அத்தி வரதருக்கு புதிய அலங்காரம் செய்வதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி மற்ற நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
கூடுதல் வசதிகள் செய்யப்படுமா?
அத்தி வரதர் தரிசனத்துக்காக வார இறுதி நாட்களில் ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் பக்தர்களும், மற்ற நாள்களில் 20 ஆயிரம் பக்தர்களும் வருவார்கள் என்று திட்டமிடப்பட்டே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதிர்பார்த்ததைவிட பல மடங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கழிப்பறைகளையும், குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். வரிசையில் நிற்கும் பக்தர்கள் அதைவிட்டு வெளியே வர முடியாது. இதனால் அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று குடிநீர் வழங்க தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். வரிசைக்காக கட்டப்படும் தடுப்புக் கட்டைகளின் தூரத்தை அதிகரிக்க வேண்டும் என்றனர்.