தியாகம் என்பதே குர்பான்

தியாகம் என்பதே குர்பான்
Updated on
2 min read

இஸ்லாம் - அதனுடைய வார்த்தைகள், அதன் வேதம் இவையாவும் வானோங்கி உயர்ந்து நிற்கிறது. இஸ்லாத்தை ஏற்று அதைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கு இரு பெருநாட்களை இதயம் உவந்து கொண்டாடும்படி அனுமதி தந்திருக்கிறது. அதில் ஒன்று ‘ஈதுல்பித்ரு’ எனும் ஈகைத் திருநாள் ரம்ஜான். மற்றொன்று ‘ஈதுல் அல்ஹா’ எனும் தியாகத் திருநாள் பக்ரீத். இவ்விரு பெருநாட்களும் பிறர் நலன் சார்ந்து ஏழை எளியோரை கருத்தில் கொண்டு கவனித்து அவர்களுக்கு நலன், பலன்களை விளைவிக்கும் வகையில் இப்பெருநாட்கள் முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

ஆடம்பரம், படோடாபம், வீண் விரயங்கள் செய்து, ஏழைகளைப் புறக்கணித்து நமது வலிமையை காட்டும் அளவுகோல்களுக்காக இப்பெரு நாட்கள் நமக்கு பகடைக் காய்களாக பயன்படுத்தி கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை.

இறையச்சத்தின் ஆழம் அளவிடப்படும்

இரு பெருநாட்கள் கொண்டாடப்படுவதின் மூலமாக நமது உள்ளத்தில் இருக்கும் ‘ஈமான்’ எனும் இறை நம்பிக்கை எடை போடப்படுகிறது. மனத் தூய்மையின் வலிமையை அறிய உதவுகிறது. ‘தக்வா’ எனும் இறையச்சத்தின் ஆழம் அளவிடப்படுகிறது. உண்மையில் ஒரு முஸ்லிம் இரு பெருநாட்களை அடைந்து கொண்டாடும்போது அவன் உள்ளத்தில் இறை அச்சஉணர்வு, அல்லாஹ்வின் அருள் ஆகியவை அதிகப்படியாக கொண்டிருக்க வேண்டும் என்பதே நியதி.

‘ஈதுல் அல்ஹா’ எனும் தியாகத் திருநாள், இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்வின் நடந்த சம்பவத்தின் அடிப்படையிலானது. நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனுக்கு கட்டுப்பட்டு இறைவனின் உத்தரவு எதுவோ அதை உடனே நிறைவேற்றத் துடிக்கும் இதயத்தை பெற்றிருந்தமையின் காரணத்தால் இப்ராஹிமின் இதயத்தை பார்த்து ரசித்த இறைவன், அவர் செய்த செயற்கரிய செயலை இந்த உலகம் முடியும் வரை இஸ்லாமியர்கள் பின்பற்ற வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தி விட்டான்.

அதில் ஒன்றுதான், தான் பெற்ற மகனை அறுத்துப் பலியிடத் துணிந்தது. இறைதூதர் கனவில் கண்ட காட்சியை இறை செய்தி என அறிந்து நிறைவேற்ற முனைந்த நிகழ்வு இது.

இப்ராஹிம் (அலை) தியாகம் ஏற்கப்பட்டது

மக்காவில் ‘மினா’ என்ற மலையில் வயோதிகத்தில் தான் பெற்ற பாலகனை அழைத்துச் சென்று அறுக்க முற்பட்டார்கள். இந்நேரத்தில்தான் வானவர்கள் ஆட்டுக்கிடாயுடன் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் முன்தோன்றி ‘‘இப்ராஹீமே! இறைவன் உங்கள் தியாகத்தை ஏற்றுக் கொண்டான். உங்களை மெச்சி சிலாகித்து பாராட்டினான். உங்கள் மகனுக்குப் பகரமாக இந்த ஆட்டை அறுத்து பலியிடக் கூறினான்’’ என நன்மாராயங் கூறி அறுத்துப் பலியிட்டனர்.

இந்நிகழ்வின் செயலை அல்லாஹ் பொருந்திக் கொண்டதின் காரணமாக ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்வை முஸ்லிம்கள் கடைபிடித்து வருகின்றனர். ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் சமுதாயத்தவர்களாகிய நாமும் சற்றேறத்தாழ 1,500 ஆண்டுகளாக இறைகட்டளையின் ஒன்றான ஆடு, மாடு, ஒட்டகைகளை அறுத்துப் பலியிட்டு நம்முடைய தியாகத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறோம்.

துல்ஹஜ் பிறை 10-ல் முஸ்லிம்கள் செய்யும் குர்பானியின் ஆடு, தனது கொம்புடனும் குளம்புடனும் மறுமை நாளில் வரும். ‘‘குர்பானியின் இறைச்சியோ, ரத்தமோ அல்லாஹ்விடம் போய் சேருவதில்லை என்றாலும் உங்களின் இறையச்சம்தான் அவனை சென்றடைகிறது.’’ -அல்குர்ஆன் 22:37

‘‘குர்பானி பிராணியின் ரத்தம் பூமியில் வீழ்வதற்கு முன்பே அது இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்பட்டு விடுகிறது. ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தைக் கடக்க அதுவே வாகனமாக அமையும். எனவேதான் பரிபூரணமான மகிழ்வுடன் குர்பானியை நிறைவேற்றுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’’ - நிர்மதி

குர்பானி பிராணி ஒட்டகம் எனில் ஐந்து வயதும், மாடு எனில் இரண்டு வயதும், ஆடு எனில் ஒரு வயதும் உடையதாக இருக்க வேண்டும். குர்பானி பிராணி குருடு, செவிடு, சொறி சிரங்கு, நோய்வாய்ப்பட்டது, நொண்டி, மூக்கு அறுக்கப்பட்டது, பல் உடைந்தது, காது, வால், கண் ஆகியவை மூன்றில் ஒரு பாகம்விட அதிகம் அறுக்கப்பட்டது - இவைகளை குர்பானி பிராணியாக அறுக்கக் கூடாது.

ஆடு, மாடு, ஒட்டகம் குர்பானி கொடுப்போர் அதனுடைய இறைச்சியை மூன்று பங்காக்கி, தனக்கென ஒன்று, உறவினர்களுக்கு ஒன்று, ஏழை எளியவர்களுக்கு ஒன்று என்று பிரித்து வழங்குவர்.

இந்த புனிதமான தியாகத் திருநாளில் சகோதர வாஞ்சையோடு கொண்டாடி மகிழ இறைவன் அருள்வானாக. தியாகம் என்பதே குர்பான். ஜெய குர்பான். அமீன்.

கட்டுரையாளர்:

பன்னூலாசிரியர்

அ.க.அ.ஸுபைர் ஸய்யிதி

திருநெல்வேலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in