

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர், சூரிய நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 12-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
இவ்விழாவின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் சூரிய நாராயணராய் எழுந்தருளினார். 4 மாட வீதிகளில் 14 குழுவினை சேர்ந்த 411 நடன கலைஞர்கள் நடனங்களை ஆடி பக்தர்களை கவர்ந்தனர்.
இரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். லேசான மழை பெய்த போதிலும் பக்தர்கள் திரண்டு வந்து வாகன சேவையை கண்டு களித்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் ஜீயர் குழுவினர், தேவஸ்தான அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று காலை தங்க தேரோட்டமும், இரவு குதிரை வாகன சேவையும் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நாளை காலை கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.