

பக்தியை தம்முடைய பாடல்களின் மூலமாக பரப்பிய பெண்களைப் பற்றிய செய்திகளும் அவர்களைப் பற்றிய ஆவணமும் வெகு குறைவாகவே நம்மிடையே காணப்படுகிறது. காரைக்கால் அம்மையார், ஆண்டாள் தொடங்கி எண்ணற்ற பெண் கவிகளும் பக்தியைப் பரப்பிய அருளாளர்களாக வலம் வருவதை தன்னுடைய ஆய்வின் முக்கியப்பணியாக செய்துவருகிறார் அலமேலு ராமகிருஷ்ணன்.
- அலமேலு ராமகிருஷ்ணன்
இவர் இந்தியப் பண்பாடு கலாசார அமைச்சகத்தின் ஆதரவோடு கர்னாடக இசையில் மிகவும் அரிதான பெண் சாகித்யகர்த்தாக்களைக் குறித்த தனது 4-வது அமர்வை சமீபத்தில் சென்னை, ஆர்.கே.கன்வென்ஷன் அரங்கில் நிகழ்த்தினார். ஒவ்வொரு பெண் வாக்கேயக்காரருடைய பாடல்களிலிருந்தும் 2 அல்லது 3 பாடல்களைப் பாடிய அலமேலு ராமகிருஷ்ணன், இறைவனை தம்முடைய பாட்டில் ஏற்றிப் பாடிய பெண் கவிகளைப் பற்றிப் பேசியதிலிருந்து சில துளிகள்:
குட்டிகுஞ்சு தங்கச்சி
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் குட்டிகுஞ்சு தங்கச்சி (1820 முதல் 1908 வரை). புகழ் பெற்ற இசை வல்லுநரான மகாராஜா சுவாதித் திருனாள் அவர்களின் பேரன்புக்கு உரிய இரயிம்மன் தம்பி என்பவரின் மகள். தந்தையிடமே இசை மற்றும் நாட்டியம் பயின்றவர். சம்ஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான பக்திப் பாடல்களை எழுதியுள்ளார். ஆலயத்தின் சடங்குகளை யொட்டி நிகழ்த்தப்படும் ஆட்ட கதா, கிளிப்பாட்டு, திருவாதிரப்பாட்டு, துள்ளல் ஆகிய இசை வடிவங்களுக்கும் பாடல்கள் மற்றும் நாடகங்கள் இயற்றி இருக்கிறார். நாட்டியத்திற்கு உகந்த பதங்களும் இயற்றி இருக்கிறார். கிருதி என்ற பாடல் வகையில் முதல் முதலாக இயற்றிய பெருமை இவரையே சாரும்.
முனைவர் பேபி ஸ்ரீராம்
பக்தியை பிரதானமாகக் கொண்ட இவரின் வர்ணங்கள், கிருதிகள், ஸ்வரஜதிகள் மற்றும் தில்லானா ஆகிய இசை அமைப்புகளை அற்புதமாக இசை, நாட்டிய உலகுக்கு அளித்திருக்கிறார். சாருகுந்தளம், கோமளாங்கி போன்ற பல புதிய ராகங்களில் இறைவனின் புகழை பாடுபவர்.
பொப்பிலி மகாராணி ஸுபத்ராம்மா
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். பக்தி மட்டும் அல்லாமல் சிறந்த தத்துவங்களும் இவரின் பாட்டில் வெளிப்படும். அன்றைய சூழ்நிலையை ஒட்டி, மேடை ஏறி கச்சேரிகள் செய்யாவிடினும், ஆழ்ந்த இசை ஞானம் உடையவர். எல்லோரும் கேட்டு அனுபவிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான ராகங்களில் பாடல்கள் இயற்றியவர். இவரது பாடல் தொகுப்பு 1965-ம் ஆண்டு புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.
சுந்தரவல்லி ஸ்ரீதேவி
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். தற்சமயம் வாழ்ந்து வருபவர். அன்னமாச்சார்யாவின் பாடல்களைப் பாடி 2008-ம் ஆண்டு உலக சாதனை புரிந்தவர். இவரின் பாடல்கள் ‘சத கீர்த்தன மணிஹாரம்’, ‘ஸ்ரீ ஸ்ரீனிவாச கீதமாலிகா மாலை’என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. பாடல்களை குறுந்தகடுகளாகவும் வெளியிட்டிருக்கிறார்.
வை.மு. கோதை நாயகி
கோதை நாயகி அம்மாள் 1901 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பக்தியைப் பிரதான மாகக் கொண்ட இவரின் பாடல்கள் ‘இசை மார்கம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. நாரத முகாரி, ஸுமனேஸ ரஞ்சனி போன்ற அபூர்வ ராகங்களில் இறைவனைப் போற்றும் பாடல்களை பாடியிருப்பவர்.
லக்ஷ்மி ராஜாங்கம்
லக்ஷ்மி ராஜாங்கம் 1910 முதல் 2009 வரை வாழ்ந்தவர். 100-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றிய வாக்கே யகாரர் ஆவார். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் பாடகராக இருந்தவர். இவரது கிருதிகள் ஒலி பரப்பப்பட்டுள்ளன.
டி. பட்டம்மாள்
டி. பட்டம்மாள் ஒரு சிறந்த இசை மேதை. ஏராளமான பாடல்கள் புனைந்தவர். அவற்றில் குறிப்பிடத்தக்கவை மேள ராக கிருதி மாலை, ஜன்ய ராக கிருதி மாலை, இசை துவக்க பாடல்கள், அருள் கீர்த்தனைகள், மாதவ கீதம், குமார சம்பவம் என்பன. ஸுகபாவனி போன்ற புதிய ராகங்களை உருவாக்கியவர். பக்தி ரசம் ததும்பும் பாடல்கள், பல கருத்துச் செறிவுள்ள பாடல்களை நமக்கு அளித்தவர்.