

திருநாரையூர் சௌந்தர்யேஸ்வரர் திருக்கோயில்
பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. அவை ஏட்டுச் சுவடிகளாய் இருந்த இடத்தை அவருக்கு காட்டிக் கொடுத்தவர் பொள்ளா பிள்ளையார். அந்த பொள்ளா பிள்ளையார் குடி கொண்டிருக்கும் இடம் தான் திருநாரையூர் சௌந்தர்யேஸ்வரர் திருக்கோயில்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் எட்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது திருநாரையூர். நம்பியாண்டார் நம்பி அவதரித்த ஊரும் இதுதான். துர்வாச முனிவரின் கோபத்தால் நாரையாகச் சபிக்கப்பட்ட கந்தர்வன் ஒருவன், காசியிலிருந்து தனது அலகில் புனித நீரை எடுத்துவந்து திருநாரையூர் சௌந்தர்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தான்.
ஒரு சமயம் அவன் புனித நீர் எடுத்து வருகையில் கடும்புயல் தாக்கி இறக்கைகள் இரண்டும் ஒடிந்து போனது. (அப்படி இறக்கைகள் ஒடிந்து விழுந்த இடம் தான் இப்போது சிறகிழந்தநல்லூர்) அப்படியும் மனம் தளராத கந்தர்வன், தட்டுத்தடுமாறி புனிதநீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்தான். அவனது பக்தியை மெச்சிய ஈசன் அப்போதே அவனுக்கு சாப விமோசனம் கொடுத்தார்.
நைவேத்தியம் உண்ட பிள்ளையார்
நம்பியாண்டார் நம்பியின் தந்தையார் தினமும் இங்கு வந்து சிவனுக்கும் பிரகாரத்தில் உள்ள பொள்ளா பிள்ளையாருக்கும் (உளியால் பொள்ளப்படாத பிள்ளையார்) பூஜை செய்வார். ஒரு நாள் அவரால் பூஜைக்குச் செல்லமுடியவில்லை. தனக்குப் பதிலாக தனது மைந்தன் நம்பியாண்டார் நம்பியை அனுப்பியவர், பூஜையை முறையாகச் செய்யாவிடில் அங்குள்ள பொள்ளா பிள்ளையார் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று எச்சரித்து அனுப்பினார்.
அதன்படியே சிவனுக்கும் பொள்ளாப் பிள்ளை யாருக்கும் பயபக்தியுடன் பூஜை செய்தார் நம்பி. ஆனால், பிள்ளையார் மட்டும் நைவேத்தியத்தை ஏற்கவில்லை. பூஜையில் ஏதோ தவறு செய்து விட் டோமோ என நினைத்து அழுகிறார் நம்பி. பாலகன் அழுவதை தாங்க முடியாத பிள்ளையார் நேரில் தோன்றி நைவேத்தியம் முழுவதையும் எடுத்து உண்கிறார். திருப்தியுடன் வீடு திரும்பினார் நம்பி.
நைவேத்திய பாத்திரத்தில் எதுவும் மிச்சம் இல்லாததைப் பார்த்த தந்தை, மகனை விசாரிக்கிறார். ’’பிள்ளையார் சாப்பிட்டுவிட்டார்’’ என்கிறார் நம்பி. தந்தையால் நம்பமுடியவில்லை. மறுநாள் ஊரார் முன்னிலையில் பல சோதனைகளுக்குப் பிறகு நம்பி தனது பக்தியை நிரூபித்தார்.
அந்தணர் பாதுகாப்பில் சுவடிகள்
இந்த நிகழ்வுக்குப் பிறகு, பன்னிரு திருமுறைகள் ஓலைச் சுவடிகளைத் தேடும் பணியில் இறங்கினார் ராஜராஜ சோழன். பொள்ளா பிள்ளையாரின் அருள் பெற்ற நாரையூர் நம்பியைக் கேட்டால் சுவடி இருக்குமிடம் தெரியுமெற்று அவருக்கு யோசனை சொல்லப்பட்டது.
அதன்படி நம்பியை அரண்மனைக்கே வரவழைத்துக் கேட்டார் ராஜராஜன். அப்போது, பொள்ளா பிள்ளையாரை வேண்டி திருமுறைகள் இருக்குமிடத்தைக் கேட்கிறார் நம்பி. அவை சிதம்பரத்தில் அந்தணர்கள் பாதுகாப்பில் இருப்பதாக பொள்ளா பிள்ளையார் சேதி சொல்கிறார். அதன்படியே, சிதம்பம் அந்தணர்கள் கையில் இருந்த திருமுறைகளை தேடிக் கண்டுபிடித்து கேட்டுப் பெற்றார் ராஜராஜன்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த இத்திருத்தலத்தில் வைகாசி புனர்பூச நட்சத்திரத்தில் நம்பியாண்டார் நம்பி குருபூஜை விழாவும் சங்கடகர சதூர்த்தி விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
படங்கள்: ’மேலக்கடம்பூர்’ விஜய்