

வினை அறுத்த சிவன்
பக்தர்களை சோதித்துப் பார்ப்பதும் முடிவில் பலனைக் கொடுப்பதும் பரமனுக்கு வாடிக்கை என்பார்கள். அப்படியொரு பக்தனைப் பரமன் சோதித்துப் பலன் கொடுத்த இடம்தான் திருத்திணை நகர் சிவக்கொழுந்தீசர் திருத்தலம்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ளது தீர்த்தனகிரி. முன்பு இது திருத்திணை நகராக இருந்தது. இவ்வூரைச் சேர்ந்த விவசாயி பொன்னான். தினமும் சிவனடியார் யாருக்காவது அமுது படைக்காமல் பொன்னானும் அவரது மனைவியும் சோறைத் தொட மாட்டார்கள். தன் மீது இவர்கள் கொண்டிருக்கும் பற்றுதலையும் பக்தியையும் சோதிக்க சிவபெருமான் விரும்பினாராம். ஒருநாள் இவர்கள் வீட்டுப் பக்கம் சிவனடியார்கள் யாரும் செல்லாமல் பார்த்துக்கொண்டாராம்.
அடியார் ரூபத்தில் வந்த சிவன்
இதனால் சஞ்சலப்பட்டுப் போன பொன்னானும் அவரது மனைவியும் உணவருந்தாமலேயே கழனிக்கு உழப்போனார்கள். உச்சி வெயில் கடந்து திணை வயலை அவர்கள் உழுதுகொண்டிருந்தபோது, அடியார் ரூபத்தில் அங்கு வந்தார் சிவபெருமான். ‘பசியாற வேண்டும்; அன்னமிடுவீர்களா?’ என்று கேட்டார். பூரித்துப் போன தம்பதியர், ‘இதோ வருகிறோம் சுவாமி’ என்று சொல்லிவிட்டு இல்லத்தில் ஆக்கி வைத்திருந்த உணவை எடுத்து வரப் புறப்பட்டார்கள். அவர்களை இடைமறித்த சிவன், ‘நான் உழைக்காமல் சாப்பிட மாட்டேன். நீங்கள் எனக்கு எதாவது வேலை கொடுங்கள். அதை செய்து முடித்துவிட்டு நீங்கள் இடும் அமுதுப் படையலை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சொன்னார்.
வேலை கொடுக்காமல் போனால் சிவனடியார் தங்களின் அன்னதானத்தை ஏற்றுக் கொள்ளாமல் போய்விடுவாரோ என்று அஞ்சிய தம்பதியர், தாங்கள் வரும்வரை இந்த வயலை உழுதுகொண்டிருக்க வேண்டுமென்று கோரினர். இருவரும் திரும்பி வந்தபோது, வயலில் திணை விதைக்கப்பட்டு அது பூத்துக் காய்த்து அறுவடைக்குத் தயாராய் இருந்தது.
வியந்துபோன பொன்னானும் அவரது மனைவியும், அடியார் ரூபத்தில் இருந்த சிவனுக்கு அமுது படைத்துக்கொண்டே, ‘இது எப்படி சுவாமி சாத்தியமாயிற்று?’ என்று கேட்டார்கள். பதிலேதும் பேசாமலேயே மாயமானார் சிவபெருமான். அப்போதுதான், தங்கள் வயலை உழுது, திணை விதைத்து, விளைவித்தது சிவபெருமான் என்ற உண்மை பொன்னான் தம்பதிக்கு தெரிந்தது. உடனே சிவபெருமானை நோக்கி வேண்டிய இருவரும், ‘நீங்கள் இங்கேயே சுயம்புவாக இருந்து மக்களை செழிப்புடன் வாழ்விக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே, அங்கே அப்போதே சுயம்புலிங்கமாய் காட்சி கொடுத்தாராம் சிவபெருமான். அவர் தான் பின்னாளில் திருத்திணை நகர் சிவக்கொழுந்தீசராகப் போற்றப்பட்டார்.
தொழுநோய் தீர்த்த குளம்
சிவக்கொழுந்தீசர் கோயிலின் வடபகுதியில் ஜாம்பவ தீர்த்தம் எனும் திருக்குளம் உள்ளது. ஒருகாலத்தில், வீரசேனன் என்ற மன்னனுக்குத் தீராத வியாதியாய் இருந்த தொழுநோயை இத்திருக்குளத்தின் புனித நீர் நிவர்த்தி செய்தது.
‘நீறு தாங்கிய திருநுத லானை நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை கூறு தாங்கிய கொள்கையி னானைக் குற்றமில்லியைக் கற்றையஞ் சடைமேல் ஆறுதாங்கிய அழகனை அமரர்க் கரிய சோதியை வரிவரால் உகளும் சேறுதாங்கிய திருத்திணை நகருள் சிவக்கொழுந் தினைச் சென்றடைமனமே!’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல்பெற்ற இவ்வாலயம் இன்றைக்கும் தீராத வியாதிகள் தீர்க்கும் திருத்தலமாகவும் வாழ்க்கையில் தோற்றவர்களுக்குத் திருப்பம் தரும் திருத்தலமாகவும் கருதப்படுகிறது.
படங்கள் ஜெ.ஆர்.ராமகிருஷ்ணன்