பங்குனி உத்திரம்... தெய்வத் திருமணங்கள்! 

பங்குனி உத்திரம்... தெய்வத் திருமணங்கள்! 
Updated on
2 min read

பங்குனி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். பங்குனி மாதம் என்பது வணங்குவதற்கும் பூஜைக்கும் உரிய மாதம். பங்குனி மாதம் என்பது வைபவங்களுக்கான மாதம். அற்புதமான பங்குனி மாதத்தை தெய்வ மாதம் என்றே போற்றுகின்றனர்.

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும் விரதம் இருப்பதும் வழக்கம். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவம் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்று புராணங்கள் சொல்கின்றன.

மாதங்களில் 12வது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம் என்று கொண்டாடப்படுகிறது. எனவே பங்குனி மாத உத்திரத்தின் சிறப்புகள் அதிகம்.
ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம் என புராணங்கள் விவரிக்கின்றன.

முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் பங்குனி உத்திர நன்னாளில்தான். அதேபோல், ஸ்ரீவள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரம் என்கிறது புராணம்.

தேவர்களின் தலைவன் என்று போற்றப்படுகிற தேவேந்திரன் இந்திராணியைத் திருமணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர நன்னாளில்தான். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான், அழகும் திறனும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது இதே பங்குனி உத்திர நாளில்தான் என்கிறது புராணம்.

பங்குனி உத்திர நாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். இதில் மகிழ்ந்த திருமால், தன் திருமார்பில் மகாலக்ஷ்மிக்கு வீற்றிருக்கும் வரத்தைத் தந்தருளினார் என்கிறது விஷ்ணு புராணம்.

படைப்புக்கடவுளான பிரம்மா, தன்னுடைய நாவில் ஸ்ரீசரஸ்வதி தேவியை வைத்துக் கொண்டது பங்குனி உத்திர நாளில்தான்! ஐயப்ப அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பங்குனி உத்திர நாளில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கிராமக் கோயில்களில், அக்கினிச்சட்டி ஏந்தும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.

எண்ணற்ற ஆலயங்களில், சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும். பங்குனி உத்திரப் பெருந்திருவிழா நடைபெறும். பத்துநாள் விழாவாக கோலாகலமாக நடைபெறும்.

வருகிற 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரம். இந்த நன்னாளில், அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வோம். திருக்கல்யாணம் நடைபெறும் ஆலயத்துக்குச் சென்று, திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிப்போம். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்.

முடிந்தால், அன்றைய தினம் விசேஷ பூஜைக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குவோம். முருகப்பெருமானுக்கு செவ்வரளியும் மகாலக்ஷ்மி தாயாருக்கு வெண்மை நிற மலர்களும் சிவனாருக்கு வில்வமும் வழங்கி வேண்டிக்கொள்வோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in