

திருவாதிரையில் ஒருவாய் களி என்றொரு வாசகமே உண்டு. நாளைய தினம் 30ம் தேதி புதன்கிழமை ஆருத்ரா தரிசனம். இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனாருக்கு, களியமுது படைத்து வேண்டுவோம். சகல கலைகளையும் யோகத்தையும் தந்து அருளுவான் பரமேஸ்வரன்!
தில்லை என்பது சிதம்பரத்தின் ஆதிகாலத்து, புராண காலத்துப் பெயர். தில்லை என்றதும் சிதம்பரம் நினைவுக்கு வரும். சிதம்பரம் என்றதும் நடராஜர் நினைவுக்கு வருவார். நடராஜர் என்றதும் நினைவுக்கு வருவது... மார்கழி ஆருத்ரா தரிசனம். திருவாதிரை என்றதும் நினைவில் வருவது... களி. திருவாதிரைக் களியமுது.
விறகு வெட்டும் தொழில் செய்து வந்த சேந்தன், சிவபெருமானின் மீது மாறா பக்தி கொண்டவன். விறகு வெட்டுவான். காசாக்குவான். அதைக் கொண்டு கிடைத்த உணவைச் சாப்பிடுவான். ஆனாலும் தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவிட்டால்தான் நிம்மதியாவான்.
ஒருநாள் மழை. கடும் மழை. இயல்பு வாழ்க்கை பாதித்தது. விறகு வெட்டமுடியவில்லை. அப்படியே வெட்டினாலும் முழுக்க நனைந்திருந்ததால், விற்கமுடியவில்லை. வாங்குவோர் முன்வரவில்லை.
விற்றால்தான் காசு. காசு கிடைத்தால்தான் உணவு. எல்லாவற்றையும் விட, முக்கியமாக, சிவனடியாருக்கு உணவு வழங்கமுடியும். தவித்துக் கலங்கினான் சேந்தன். கேழ்வரகுதான் இன்றைக்கு என தேற்றிக் கொண்டான். கேழ்வரகில் களி செய்தான்.
ஒருவழியாக உணவு தயார். ‘அப்பாடா...’ எனப் பெருமூச்சுவிட்டு வாசலுக்கு வந்தான். ஆனால் சிவனடியார் கண்ணில் படவே இல்லை. நீண்ட நேரமாக வாசலில் வழி பார்த்திருந்தான். வெகு நேரம் கழித்து, சிவனடியார் ஒருவர் வந்தார். சேந்தன் சிவனடியாரை வரவேற்றான். கைகூப்பினான். விழுந்து வணங்கினான். சிவனடியாராக வந்த சிவபெருமான், களியை எடுத்து, ரசித்து ரசித்துச் சாப்பிட்டார். ருசித்து ருசித்துச் சாப்பிட்டார். வார்த்தைக்கு வார்த்தை பாராட்டினார். வாய்க்கு வாய் பாராட்டினார். ‘இது களியமுது’ என்று வாயார, மனதார வாழ்த்தினார்.
நெகிழ்ந்தான் சேந்தன். நெக்குருகிப் போனான். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.
மறு நாள். விடிந்தது. பிரமாண்டமான சிதம்பரம் கோயில். நடை திறக்கப்பட்டது. தீட்சிதர்கள் சிவபூஜைக்காக, சந்நிதி சந்நிதியாகத் திறந்தார்கள். பூஜையைத் தொடங்குவதற்கு முனைந்தார்கள். சிவபெருமானின் சந்நிதியைத் திறந்ததும் எல்லோரும் அதிர்ந்துதான் போனார்கள். அதிசயித்துப்போனார்கள்.
கருவறை வாசலில் களி. மூலவரின் திருவாயில் களிப் பருக்கைகள். சந்நிதியில் எங்கு திரும்பினாலும் களியமுது! ‘என்ன உணவு இது? நம் மடப்பள்ளியில் இப்படிச் செய்ததே இல்லையே. இதுவரை இந்த உணவை இறைவனுக்குப் படைத்ததே இல்லையே... எப்படி இப்படி?’ குழம்பினார்கள். தவித்தார்கள் தீட்சிதர்கள்.
ஊர்மக்களுக்கு சேதி பரவியது. மன்னனுக்கும் சென்றது. அதனிடையே மன்னனுக்கு கனவு. கனவில் வந்த ஈசன், சேந்தனின் களியமுதையும் அதன் ருசியையும் அவனுடைய பக்தியையும் தெரிவித்தார்.
அன்றைய தினம், ஆலயத்தில்... ஸ்ரீநடராஜர் ரதோத்ஸவத்தில் பவனி வரும் வைபவம். மன்னனும் வந்திருந்தான். மக்களும் கூடியிருந்தனர். தேர் வடம் பிடிக்க மன்னன் உட்பட அனைவரும் ஆவலுடன் இருந்தனர். வடம் பிடித்தனர். இழுத்தனர்.
முதல் நாள்தான் மழை பெய்திருந்ததே. வீதியில் சேறாக இருந்தது. சேற்றில் சிக்கிக் கொண்டது தேர்ச் சக்கரம். ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை.
தேர் வடம் பிடிப்பவர்களில் ஒருவனாக சேந்தனும் நின்றிருந்தான். கூட்டத்துடன் கூட்டமாக நின்று, வடம் பிடித்தான். அப்போது, ‘சேந்தனாரே! என் மீது பல்லாண்டு பாடுங்கள். நீர் பல்லாண்டு பாடினால்தான் தேர் நகரும்’ என்று கோயிலில் இருந்த அனைவருக்குமாக அசரீரி ஒன்று கேட்டது.
திகைத்து வியந்தார்கள் எல்லோரும். யார் யார் என்று மன்னன் தேடினான். சேந்தன் எனும் ஏழை, விறகுவெட்டி, சிவ பக்தன், சேந்தனார் என உலகத்தாரால் அறியப்பட்டான். களியமுதும் சிவனாருக்கு உரிய முக்கியமான நைவேத்தியமாக ஆனது!
இன்று வரை ஆடல்வல்லான் குடிகொண்டிருக்கும் தில்லை சிதம்பரம் மட்டுமின்றி, எல்லா சிவாலயங்களிலும் எல்லார் வீடுகளிலும் மார்கழி திருவாதிரை நன்னாளில், ஆருத்ரா தரிசன நன்னாளில், களியமுது படைக்கப்படுகிறது.
திருவாதிரையில் ஒருவாய் களி என்றொரு வாசகமே உண்டு. நாளைய தினம் 30ம் தேதி புதன்கிழமை ஆருத்ரா தரிசனம்.
ஆருத்ரா தரிசன நாளில், தென்னாடுடைய சிவனாருக்கு, களியமுது படைத்து வேண்டுவோம். சகல கலைகளையும் யோகத்தையும் தந்து அருளுவான் பரமேஸ்வரன்!