

பொதுவாகவே, வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருக்கின்றன. தெய்வ வழிபாடுகளும் நிறையவே இருக்கின்றன. எந்த வழிபாடாக இருந்தாலும், எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் அதில் தவறாமல் இடம்பிடிப்பது, தீபம் ஏற்றுதல். எந்தவொரு சடங்கு சாங்கியமாக இருந்தாலும் முதலில் விளக்கேற்றச் சொல்கிறது சாஸ்திரம்.
நம் வழிபாட்டில், விளக்கிற்கும் விளக்கு ஏற்றுவதற்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் எல்லா நாளும் விளக்கேற்ற வேண்டும். நம் பக்தியில் தீபமேற்றுதல் என்பது இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. முக்கியமாக, செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் காலையும் மாலையும் விளக்கேற்ற வேண்டும்.
பல வீடுகளில், அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கேற்றுவார்கள். அதேபோல், காலையும் மாலையும் வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் விளக்கேற்றுவார்கள்.
விளக்குச் சுடரில், அம்பிகை குடிகொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம். அப்பேர்ப்பட்ட அம்பிகைக்கு உரிய நாட்கள்தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் அம்பாள் வழிபாடு செய்யச் செய்ய, நலமும் வளமும் பெற்று வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நவராத்திரி விழாவின் போது, தினமும் தேவி மகாத்மியம் பாராயணம் செய்வது நல்லது. சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி முதலானவற்றைப் பாராயணம் செய்து அம்பிகையை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.
இதேபோல், நவராத்திரிப் பெருவிழாவின் போது, அகண்ட தீபம் ஏற்றி வழிபடும் முறையும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அகண்ட தீபம் என்பது அகலமான பாத்திரத்தில் அல்லது விளக்கில் தீபமேற்றி வழிபடுவது அல்ல. ஒரு தீபத்தை, அது அணையாமல் எரிந்து கொண்டே இருக்கச் செய்வது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களோ அல்லது கடைசி நாளன்றோ அகண்ட தீபத்தை எரியவைக்கலாம். நவராத்திரிச் செவ்வாய்க்கிழமையில் மாலையில் இருந்தும் அகண்ட தீபம் ஏற்றலாம்.
அம்பாளை ஆவாஹனம் செய்த இடத்தில், அல்லது பூஜையறையில் மணைப்பலகையை வைக்கவேண்டும். அதன் மேல், மூன்று கோணமாக சந்தனத்தால் கோலம் போல் கோடுகள் இட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு நடுவே, சந்தனம் குங்குமம் இட்டு, பூக்களால் அலங்கரித்து, அதன் மீது விளக்கை வைக்க வேண்டும். இரண்டு விளக்குகளையும் ஏற்றி வைக்கலாம்.
இதில் ஒரு விளக்கு வெள்ளி அல்லது பித்தளை விளக்காகவும் இன்னொன்று அகல் விளக்காகவும் இருப்பது விசேஷம். முடிந்தவர்கள், ஒன்பது நாட்களும் விளக்கேற்றி வைக்கலாம். இயலாதவர்கள், நவராத்திரி வருகிற செவ்வாய்க்கிழமையில், நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களிலோ ஏற்றி வைக்கலாம். இந்த விளக்குகள், தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கவேண்டும். இதுவே அகண்ட தீபம். பூஜைகள் முடிந்த பிறகு இந்த விளக்குகளை தானமாக எவருக்கேனும் வழங்கலாம்.
அகண்ட தீபம் ஏற்றி, தீபத்தின் ஜோதியில் குடிகொண்டிருக்கும் அம்பாளை மனதாரத் துதித்து வழிபட்டால், பொன் ஆபரணச் சேர்க்கை நிகழும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். கஷ்டங்களில் இருந்து விடுபடுவீர்கள்.