

புரட்டாசி கடைசி நாளில் அமாவாசை அமைந்துள்ளது. முன்னோர் வழிபாட்டைச் செய்ய மறக்காதீர்கள். முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து அவர்களை வழிபடுங்கள்.
புரட்டாசி மாதம் என்பது புண்ணியம் நிறைந்த மாதம் என்பார்கள். புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கான மாதம் என்பார்கள். புரட்டாசி மாதம் என்பது வழிபாட்டுக்கும் பூஜைகள் மேற்கொள்வதற்குமான மாதம் என்பார்கள்.
புரட்டாசி மாதத்தில் மகாளய பட்ச காலம் என்பது வரும். மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான நாட்கள். பித்ருக்களுக்கான நாட்கள். பித்ருக்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்து நம்மை ஆசீர்வதிக்கும் நாட்கள் என்பார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பட்சம் என்றால் பதினைந்து. மகாளய பட்ச காலம் என்பது பதினைந்து நாட்கள். முன்னோர்களுக்கான பதினைந்து நாட்கள்.
மகாளய பட்ச காலம் என்பது புரட்டாசி மாதத்தில்தான் எப்போதும் வரும். எப்போதேனும் ஆவணி மாதக் கடைசியிலும் புரட்டாசி மாத ஆரம்பத்திலும் வரும். இந்த முறை ஆவணி மாதத்திலேயே மகாளயபட்ச காலம் வந்துவிட்டிருந்தது.
ஆவணி மாத பெளர்ணமியை அடுத்து வரும் பிரதமையில் இருந்து மகாளய பட்ச காலம் தொடங்கி அமாவாசையுடன் நிறைவுற்றது.
அதேபோல், ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களுக்கான நாள்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும். அவர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, அவர்களை நினைத்து நைவேத்தியப் படையலிட வேண்டும். காகத்துக்கு உணவிடுவது மிக மிக புண்ணியம் நிறைந்தது. அவசியமும் கூட!
நாளைய தினம் அமாவாசை (16.10.2020). வெள்ளிக்கிழமை. முன்னோர்களை வணங்குவதற்கான அற்புதமான நாள். புரட்டாசி மாதத்தின் கடைசி நாளும் கூட!
இந்த நன்னாளில், பித்ருக்களை வழிபடுங்கள். தர்ப்பணம் செய்து வழிபடுங்கள். அவர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரித்து வேண்டிக்கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த ஏதேனும் உணவை படையலிட்டு, காகத்துக்கு உணவிடுங்கள். முடிந்தால் நான்கு பேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். முன்னோர்களின் பரிபூரண ஆசியைப் பெறுவீர்கள்.
இல்லத்தில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். தம்பதி இடையை இருந்த பிரிவுகள் அகலும். கருத்தொருமித்து வாழும் சூழல் ஏற்படும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.