

நாளைய தினம் செப்டம்பர் 17ம் தேதி வியாழக்கிழமை புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த நாளில் தமிழ் மாதப் பிறப்புக்கான தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோர் வழிபாடு செய்யுங்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.
புண்ணியம் நிறைந்தது புரட்டாசி மாதம் என்பார்கள். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணாவதாரத்தில் அருளியுள்ளார் மகாவிஷ்ணு. ஆனாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக, அவரை வழிபடுவதற்கு உரிய மாதமாக புரட்டாசி மாதம் போற்றப்படுகிறது.
அதேபோல், தமிழ் மாதம் பிறக்கும் போதும், அந்த மாதப் பிறப்பு நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோரை வணங்கவேண்டும். அவர்களுக்கு படையலிட்டு காகத்துக்கு உணவிட வேண்டும்.
மேலும் தமிழ் மாதப் பிறப்பு நாளில், எவருக்கேனும் இரண்டுபேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குவது மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நாளைய தினம் செப்டம்பர் 17ம் தேதி, புரட்டாசி மாதப் பிறப்பு. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.
புரட்டாசி மாதம் வந்ததும் பலரும் விரதம் மேற்கொள்ளத் தொடங்குவார்கள். இந்த மாதத்தில் அசைவம் முதலான உணவுகளைத் தவிர்ப்பவர்களும் உண்டு. சனிக்கிழமைகளில் உண்ணாநோன்பு இருந்து பெருமாள் தரிசனம் செய்வது பக்தர்களின் வழக்கம்.
ஆகவே, புரட்டாசி எனும் புண்ணியம் நிறைந்த மாதத்தின் பிறப்பில், பித்ரு வழிபாடு, பெருமாள் வழிபாடு செய்யுங்கள். எல்லையில்லா நன்மைகளைப் பெறுவீர்கள்.