

நாளைய தினம் சூரிய கிரகணம் (21.6.2020). சூடாமணி சூரிய கிரகணம். இந்த கிரகணத்தில், ஐந்து நட்சத்திரக்காரர்களுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது. அந்த ஐந்து நட்சத்திரங்கள் என்னென்ன, அவற்றுக்கு பரிகாரங்கள் என்ன, எவையெல்லாம் தானமாக வழங்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.
நாளைய தினம் 21ம் தேதி நிகழ்வது சாதாரண சூரிய கிரகணம் அல்ல. எப்போதும் வரக்கூடிய சூரிய கிரகணம். எப்போதேனும் வரக்கூடிய சூரிய கிரகணம். ஞாயிற்றுக்கிழமையும் சூரிய கிரகணமும் வருவது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. இதை சூடாமணி சூரிய கிரகணம் என்பார்கள்.
நீண்டகாலத்துக்குப் பிறகு, சூடாமணி சூரிய கிரகணம் வருகிறது.
நாளைய தினம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.20 மணிக்குத் தொடங்குகிற சூரிய கிரகணமானது, மதியம் 1.40 மணிக்கு நிறைவுறுகிறது. இந்த நேரமே சூரிய கிரகண நேரம்.
நாளை ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய சூரிய கிரகணத்தில், ஐந்து நட்சத்திரங்களுக்கு கிரகண தோஷம் அமையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ரோகிணி, அஸ்தம், மிருகசீரிடம், திருவாதிரை, அவிட்டம் ஆகிய ஐந்து நட்சத்திரக்காரர்களுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது.
எனவே எல்லோருமே கிரகணத்தின் போது ஜபதபங்கள் செய்யவேண்டும் என்றாலும் இந்த ஐந்து நட்சத்திரக்காரர்கள் அவசியம், கடவுள் துதிகளைச் சொல்லிக்கொண்டு, பாராயணம் செய்துகொண்டிருக்கவேண்டும். பெற்றோர் இல்லாதவர்கள்,அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, நைவேத்தியப் படையலிட்டு வழிபடவேண்டும். காகத்துக்கு உணவிட வேண்டும். முன்னோர்களை நினைத்து தானங்கள் செய்யவேண்டும்.
அதாவது, காலை 10.20 முதல் மதியம் 1.40 வரை கிரகண நேரம். இந்த நேரத்தில், இறை பற்றிய சிந்தனையில் இருக்கவேண்டும். பூஜையறையில் அமர்ந்துகொண்டு, தெரிந்த ஜபங்களைச் கிரகணம் முடியும் வரை சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். பகவானின் நாமாவளிகளைச் உச்சரித்துக் கொண்டிருக்கலாம். ’ராமா’ என்றோ ‘கிருஷ்ணா’ என்றோ ‘நமசிவாயம்’ என்றோ வழக்கமான நாளில் நாம் சொல்லும்போது ஏற்படும் பலனை விட மும்முடங்கு பலன்களைக் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், எல்லோருமே கிரகணத்தில் தானம் செய்வது விசேஷம். குறிப்பாக, ரோகிணி, அஸ்தம், மிருகசீரிடம், திருவாதிரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்கள், குடை, செருப்பு, போர்வை, வேஷ்டி, தீர்த்தப் பாத்திரங்கள் என முடிந்த தானங்களைச் செய்யலாம்.
தோஷ பரிகாரமாக, உங்களுக்குத் தெரிந்த ஜபங்களை, மந்திரங்களை, ஸ்லோகங்களை 11, 21, 54, 108 முறை சொல்லி வழிபடலாம். பின்னர், கிரகணம் முடிந்ததும் தானப்பொருள், வெற்றிலை, பாக்கு, உங்களால் முடிந்த தட்சணை முதலானவற்றை ஆச்சார்யர்களுக்கு வழங்கலாம்.
சூடாமணி சூரிய கிரகண நேரம் : காலை 10.20 முதல் மதியம் 1.40 வரை
கிரகண தோஷ நட்சத்திரங்கள் : ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவாதிரை, அவிட்டம்
பரிகாரம் : நம்மால் முடிந்த தானம்