

சிவ பக்தர்கள் கடைப்பிடிக்கக் கூடிய மிக முக்கியமான விரதம்... மகா சிவராத்திரி விரதம். சிவராத்திரியன்று கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகும் என்கிறது புராணம்.
சரி... மகாசிவராத்திரி நாளில் விரதம் இருப்பது எப்படி? விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பவை குறித்து ஆச்சார்யர்கள் விளக்கியுள்ளனர்.
மாதந்தோறும் சிவராத்திரி விரதம் மேற்கொள்வது மிகப்பெரிய புண்ணியம். நம்முடைய பாவங்களெல்லாம் காணாமல் போகும். அப்படி மாதந்தோறும் விரதம் இருக்க இயலாதவர்கள், மாசியில் வரும் மகா சிவராத்திரி நாளில், விரதம் இருந்தால், தெரியாமல் செய்த பாவங்களும் தெரிந்தே செய்த பாவங்களும் நீங்கும். கர்மவினைகள் அகன்று புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைப்பிடித்தால் நம் இல்லத்தில் உள்ள தரித்திரம் யாவும் விலகும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். தனம், தானியம் பெருகும். முக்தி நிச்சயம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
மனிதர்களுக்கு மிகவும் தேவையானது இரண்டு. உணவு, தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவபெருமானுக்காக மகாசிவராத்திரி நாளில் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கம். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வில் லயிக்கமுடியும். அந்த இறை நினைப்பே முக்தியைத் தரவல்லது. அதுமட்டுமா? காரியம் வீரியமாகும். செயல்களில் தெளிவு பிறக்கும். எண்ணம் போல் வாழ்க்கை அமையும்.
மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்கின்றன ஆகமங்கள். இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இதனால் எல்லா வளமும் கிடைத்து சந்ததி சிறக்க இனிதே வாழச் செய்வார் தென்னாடுடைய சிவன்!