Published : 20 Feb 2020 12:21 pm

Updated : 20 Feb 2020 16:16 pm

 

Published : 20 Feb 2020 12:21 PM
Last Updated : 20 Feb 2020 04:16 PM

மகாசிவராத்திரி; ஓடியோடி சிவ தரிசனம்!

maha-sivaratiri


மகா சிவராத்திரி நாளில், தமிழகத்தில் எங்கும் இல்லாத கொண்டாட்டமாக, குமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது சிவாலய ஓட்டம். கோலாகலமாக நடைபெறும் இந்த சிவாலய ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.


கன்யாகுமரி மாவட்டத்தில், மகா சிவராத்திரி நாளில், 12 சிவாலயங்களை தரிசித்து வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ என்ற நிகழ்ச்சி வெகு பிரபலம். ‘அரியும் சிவனும் ஒன்று!’ எனும் தத்துவத்தை உணர்த்துவதே இந்தச் சிவாலய ஓட்டம்.


மகா சிவராத்திரியன்று பக்தர்கள் விரதம் இருந்து கன்யாகுமரி மாவட்டம் கல்குளம், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களை அன்றைய ஒரேநாளில், ஓடி ஓடி தரிசிப்பதே சிவாலய ஓட்டம்.


சரி... சிவாலய ஓட்டம் எனும் வழிபாட்டுக்குக் காரணமாக புராணக் கதை உண்டு.


இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியோர் உருவம் ஏற்றார் என்றும் சொல்கிறது புராணம். புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது; தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கிவிடுமாம்.


‘தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது!’ என்று நம்பியவன் பீமன். பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘சிவனும் அரியும் ஒன்று’ என்பதை உணர்த்தவேண்டும் என்பது பகவான் கிருஷ்ணரின் விருப்பம்.


ஒருமுறை தர்மர், ராஜசூய யாகம் நடத்தத் திட்டமிட்டார். யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பி வைத்தார். அவனும் சம்மதித்தான். ஆனால், ‘வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி?’ எனத் தயங்கினான்.

ஆனால் கிருஷ்ணரோ, ‘‘பயப்படாதே பீமா. நான் உனக்குப் 12 ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்ததும் புருஷாமிருகம் பூஜிக்கத் துவங்கிவிடும். அப்போது நீ தப்பித்து விடலாம்!’’ என்று கூறினார். அதன்படி, காட்டுக்குச் சென்றான் பீமன்.


திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவனை நோக்கித் தவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது பீமன், ‘கோவிந்தா, கோபாலா!’ என்று கூவினான். இதில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், ‘கோவிந்தா, கோபாலா’ என்று மீண்டும் குரல் எழுப்பினான். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கம் தோன்றியது. அந்த இடமே திக்குறிச்சி.


இப்படி, 11 இடங்களைக் கடந்து 12-வது இடத்தில் (திருநட்டாலம்) ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், ‘உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!’ என்றான்.


அப்போது, தர்மர் அங்கே வந்தார். அவரிடம் நியாயம் கேட்டனர். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், அவர் பாரபட்சம் பாராமல், ‘’ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே!’’ என தீர்ப்பு வழங்கினார். அப்போது அங்கே ஒளிப்பிழம்புடன் தோன்றிய கிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், ‘அரியும் சிவனும் ஒன்றே!’ எனும் தத்துவத்தை உணர்த்தினார்.
இருவரும் கிருஷ்ணரை வணங்கினர். பின்னர், தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் பெரிதும் உதவியது.


இந்தப் புராண நிகழ்வைக் குறிக்கும் வகையில், மகா சிவராத்திரி நாளில், இந்தச் சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று, மாலை அணிந்து, அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள் பக்தர்கள். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள்.


‘கோவிந்தா... கோபாலா’ என்று கோஷமிட்டபடி குமரி மாவட்டத்தில் உள்ள திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவார்கள். இப்படியாக ஓடிக் கொண்டே ஒரே நாளில் 12 சிவாலயங்களையும் தரிசிப்பார்கள் பக்தர்கள் .

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மகாசிவராத்திரி; ஓடியோடி சிவ தரிசனம்!சிவராத்திரிசிவ வழிபாடுமாசி மகா சிவராத்திரிMAHA SHIVARATRI

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author